

விழுப்புரம்: வேங்கைவயல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு வஞ்சம் செய்ததால் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் வன்னியரசு கருத்து தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாணவர் பாரதிதாசன் கல்வி நிதி விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது. அம்பேக்தர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தில் திமுக ஆட்சியில் தகுதி பெற்ற 601 மாணவர்களில் 183 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதர பட்டியலின மாணவர்களுக்கு திமுக துரோகம் செய்துள்ளது.
வேங்கைவயல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீது வழக்குப்பதிவு செய்தது திமுக அரசு. இதனால் காவலர் முரளிராஜா என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தவறு ஏதும் செய்யாத நிலையில் திமுக ஆட்சியில் வஞ்சிக்கப்பட்ட எனக்கு நியாயம் கிடைக்கவில்லை எனக்கூறி என்னிடம் மனு கொடுத்துள்ளார்.
அவரை பணியிடை நீக்கம் செய்தது தவறு என புதுக்கோட்டையில் போராட்டம் நடத்திவிட்டு, அப்போதைய முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் பேசினார். பட்டியலின மாணவர்கள், இளைஞர்களை மிக மோசமாக அன்றைய திமுக அரசு வஞ்சகம் செய்துள்ளது. எனவே வேங்கைவயல் சம்பவத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.
திருநெல்வேலியில் கவின் படுகொலையில் இளைஞர் சுர்ஜித்தின் தந்தை சரவணன், தாயார் கிருஷ்ணகுமாரியை கைது செய்யக் கோரி விசிக போராட்டம் நடத்தியது. அதன் பிறகு தான் சரவணன் கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய கிருஷ்ணகுமாரி திமுக ஆட்சியில் கைது செய்யப்படவில்லை. பின்னர், முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு கொண்டு சென்று கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டார்.
பட்டியலின மாணவர் பாரதிதாசன் மீது அக்கறை இருப்பதுபோல் திமுக நாடகமாடுகிறது. மாணவர் பாரதிதாசன் வீட்டில் உளவுத்துறை போலீஸ் சென்றதாக கூறப்படுவது திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு. சோதனை போன்ற சம்பவம் நடைபெறவில்லை. அப்படி நடந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். சட்டவிரோதமாக செல்வதற்கும் அனுமதிக்கமாட்டோம். பாரதிதாசன் முழுமையாக படித்து வர வேண்டும்.
அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தில் திமுக அரசு மேற்கொண்ட வழிமுறைகளை தவெக அரசும் பின்பற்றுகிறது. அவர்களை போன்றுதான் கணக்கு கேட்கப்பட்டது. கணக்கு கேட்கக்கூடாது என திமுக நினைக்கிறது. முறையாக ரசீது அனுப்பவில்லை என்றாலும், மாணவர் பாரதிதாசனின் கல்வி நலன் கருதி முழுபணமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை கொள்கைரீதியாக விசிக ஏற்றுக் கொள்ளாது. அதானியிடம் ஒப்படைக்கப்பட்டதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. முதல்வர் விஜய், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சொல்லும்போதுதான் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.