

சென்னை: இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் சென்னை உயர் நீதிமன்றம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய கொடியேற்றும் முன்பாக வந்தே மாதரம் பாட வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டுமென சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற 15 நீதிபதிகள் பதவியேற்பு விழா நிகழ்வின்போதும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டு, இறுதியில் தேசிய கீதம் பாடிவிழா நிறைவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஆக.15) சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ள நிலையி்ல், சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் என நீதித்துறை சார்ந்த அனைத்து இடங்களிலும் முதலில் வந்தேமாதரம் பாடி அதன்பிறகு தேசியக் கொடியேற்ற வேண்டும் என்றும், இறுதியில் தேசிய கீதம் பாடவேண்டு மென்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.
அதில், ‘‘மத்திய அரசின் ஹர்கர் திரங்கா பிரச்சாரத்தை முன்னி்ட்டு வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை கொண்டாடும் விதமாக மத்திய அரசு அறிவுறுத்தல்படி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை, மாநில நீதித்துறை அகாடமி மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் சுதந்திர தினத்தன்று முதலில் வந்தே மாதரம் பாடலைப்பாடி அதன்பிறகு தேசியக்கொடி யேற்ற வேண்டும்.
பின்னர் தேசிய கீதம் பாடி விழாவை நிறைவு செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.