

சென்னை: “தமிழக ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின்படியே செயல்படுகிறார்” என்று பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட்கள், விசிக, தேமுதிக, பாமக என கட்சிகளுக்கும் மக்கள் தகுந்த வாய்ப்புகளை வழங்கியிருக்கிறார்கள். எனவே, தமிழக அரசியல் திசை என்பது ஏதோ ஒரு பக்கம் மட்டுமே சாய்ந்துவிட்டதாகக் கருதுவது தவறானது.
கடந்த 2014-ம் ஆண்டு முதல், பிரதமர் மோடி தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை வழங்கியுள்ளார். தமிழகத்தின் எதிர்காலத்தை மனதில்கொண்டு அவர் ஆற்றியுள்ள பணிகளை, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடர்ந்து பாஜக முன்னெடுக்கும்.
தேர்தல் வெற்றி - தோல்விகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பாஜக தன் அரசியல் செயல்பாடுகளை தீர்மானிப்பதில்லை. நாங்கள் அதிகாரத்துக்காக உழைக்கிறோம், வெற்றிக்காக போராடுகிறோம் என்பது உண்மைதான். ஆனால், அதேவேளையில் மக்களுக்கான எங்கள் கடமைகளையும், பணிகளையும் ஒரு சதவீதம்கூட குறைத்துக்கொள்ளாமல், எப்போதும் மக்களுடன் நின்று அவர்களுக்காக உழைப்போம்.
தவெகவுக்கு மக்கள் தற்போது ஒரு மிகப்பெரிய ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதிமுக - திமுக கூட்டணி அமைப்பது தொடர்பாக எங்களுக்கு எந்தவித தகவலும் வரவில்லை. ஆளுநரை பொறுத்தவரை, அவர் அரசியலமைப்புச் சட்டத்தின் படியே செயல்படுகிறார். விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை என்பதை அவர் தெளிவாகவே உணர்த்தியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மறுவாழ்வு அளித்ததே திமுகதான். ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒரு கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸ் இத்தகைய முடிவுகளை எடுக்கிறது என்றால், அவர்கள் எந்த அளவுக்கு திமுகவுக்குத் துரோகம் இழைக்க காத்திருந்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது” என்று அவர் கூறினார்.