

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது: முதல்வர் விஜய் ஊழலற்ற அரசு நடத்தி வருகிறார். 100 நாட்களை கடந்துள்ள தவெக ஆட்சிக்கு 100-க்கு 80 மதிப்பெண்கள் வழங்குகிறேன்.
ஊழலை முழுமையாக ஒழிப்பது சாதாரண காரியம் அல்ல. அதேநேரத்தில் தமிழக அரசு ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனினும், சில மூத்த அதிகாரிகள் அரசுக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை.
ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்ளாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என்று அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, ‘தமிழக முதல்வரின் கற்பனையில் கூட பிரதமர் என்ற கருத்து இருக்காது. அமைச்சர்கள் இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். ராகுல்தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது: தற்போதைய சட்டப்பேரவையில் அமைச்சர்கள் உறுப்பினர்களைப் பார்த்து ‘உன் மாமாவிடம் கேள், உன் அப்பாவிடம் சொல்’ என்று தரம் தாழ்ந்து பேசுவது வருத்தமளிக்கிறது. விஜய் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என அமைச்சர்கள் பேசுவது நாடகமா அல்லது நடக்காத விஷயத்தை பேசுகிறார்களா என்று தெரியவில்லை.
தலைமை செயலகத்தில் முதல்வரின் அறையை மாற்றி அமைக்கும் பணிக்காக ரூ.5.40 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் எதுவும் கோரப்படவில்லை என அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். டெண்டர் இன்றி இவ்வளவு பெரிய தொகையை நேரடியாக பணிகளுக்கு ஒதுக்கீடு செய்வது கூட்டு ஊழலாகும். தவெகவின் 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மதிப்பெண் வழங்குகிறேன்.