

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலிங்கப்பட்டி போவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி ஜன. 2-ம் தேதி திருச்சி - மதுரை சமத்துவ நடைபயணம் தொடங்குகிறேன்.
முதல்வர் முக. ஸ்டாலின் பயணத்தை தொடங்கி வைக்கிறார். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் தொல். திருமாளவன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகின்றனர். என்னுடன் பயணத்தில் 950 பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் ஸ்டாலின் நடத்தும் திராவிட மாடல் நல்லாட்சி 2026ல் மீண்டும் அமையவேண்டும் என்ற அரசியல் கருத்தை வலியுறுத்துவேன். திமுக கூட்டணி உறுதியாக தனி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது எனது கணிப்பு.
திருப்பரங்குன்றம் விவகாரம் இந்துத்துவவாதிகளால் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகிறது. திருப்பரங்குன்றம் பிரச்னையில் எவ்வித கலவர உணர்ச்சிக்கும் இடம் கொடுக்காதது மதுரைக்கு பெருமை. இந்த நிலை நீடிக்கவேண்டும். மத்தியில் திடீரென வந்தே மாதரம் கொடியை தூக்கி பிடித்து ஆதரவு திரட்டுகின்றனர். இதன் மூலம் இந்துத்துவத்தை திணிக்க முயல்கின்றனர். தமிழகத்தில் வேறுபாடு, மோதலை ஏற்படுத்த முடியாது. திராவிடத்தில் ஊறி திளைத்த தமிழகம் பக்குவப்பட்ட மாநிலம்.
தவெக தலைவர் விஜய் இன்னும் சினிமா டயலாக் தான் பேசுகிறார். 41 உயிர்கள் பறிபோனது பற்றி அவர் பதறவில்லை. அனுதாபமும், இரங்கலும் தெரிவிக்காமல் பொறுப்புணர்ச்சி இன்றி இரவோடு, இரவாக சென்னைக்கு சென்றார். 40 நாட்களுக்குப் பிறகு இறந்தவர் குடும்பங்களை தன்னுடைய இடத்திற்கு வரவழைத்து துக்கம் விசாரித்தார். இதன் மூலம் அவர் விசித்திரமான முறையை பின் பற்றி இருக்கிறார். அவர் எடுத்து வைக்கும் முதல் அடியே பிழை. அவர் எங்கு வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம். அதில் என்ன கருத்துகள் சொல்கிறார் என, கவனித்து பார்ப்போம்.