

திருநெல்வேலி: “அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக கண்டிப்பாக இருக்க முடியும். தமிழக முதல்வரின் கற்பனையில் கூட அந்த எண்ணம் இருக்காது. இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்துகளை அமைச்சர்கள் தெரிவிக்காமல் இருக்க முதல்வர் வலியுறுத்த வேண்டும்,” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக ஆட்சியை முதல்வர் விஜய் ஊழலற்ற அரசாக நடத்தி வருகிறார். இதுவரை ஒவ்வொரு துறையிலும் கப்பம் கட்டித்தான் பணிகள் நடைபெறும் என்ற நிலை இருந்தது. தற்போது அந்த நிலை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
எந்த அலுவலகத்துக்குச் சென்றாலும் பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. எந்தத் துறையிலும் கமிஷன் இல்லாமல் நேர்மையான நிர்வாகம் நடைபெற்று வருகிறது. 100 நாட்களைக் கடந்துள்ள தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு 100-க்கு 80 மதிப்பெண்கள் வழங்குகிறேன். ஊழலை முழுமையாக ஒழிப்பது சாதாரணமான காரியம் அல்ல. அது இமயமலையை நகர்த்துவது போன்ற கடினமான பணி.
அதே நேரத்தில் தமிழக அரசு ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனது நற்சான்றை தமிழக அரசுக்கு வழங்குகிறேன். அரசின் நிர்வாகத்தில் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்க மாட்டோம் என்ற நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. முறைகேடுகள் நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும், சில மூத்த அதிகாரிகள் அரசுக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்பது எனது கருத்து.
“ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்ளாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம்” என்று அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்ததாக கூறப்படும் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, “தமிழக முதல்வரின் கற்பனையில் கூட இதுபோன்ற கருத்து இருக்காது. அமைச்சர்கள் இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக கண்டிப்பாக இருக்க முடியும். இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்துகளை அமைச்சர்கள் தெரிவிக்காமல் இருக்க முதல்வர் வலியுறுத்த வேண்டும்” என்றார்.
காவிரி நீர் பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் தனது கடமையை தவறிவிட்டது. கர்நாடக அரசுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பக்கபலமாக இருந்து ஊக்குவித்து வருகிறது. இதன்மூலம் தமிழகத்திற்கு மத்திய அரசு வஞ்சகம் மட்டுமின்றி துரோகமும் செய்து வருகிறது. மேகேதாட்டு அணை பிரச்சினை எழுந்தபோது கர்நாடக எல்லையில் நான் அறப்போராட்டம் நடத்தினேன். மேகேதாட்டு திட்டம் உள்ளிட்ட காவிரி தொடர்பான பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.
ஒருசில அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துகள் ஒட்டுமொத்த அரசின் கருத்தாக கருதப்படக்கூடாது. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் பொறுப்புடன் செயல்பட்டு, சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். பெரியார், அம்பேத்கர் மற்றும் நேரு ஆகியோரின் பெயர்கள் ஏதேனும் அரசு ஆவணங்கள் அல்லது திட்டங்களில் இருந்து விடுபட்டிருந்தால், அதற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொகுதி மறுவரையறை நடவடிக்கை ஜனநாயகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும், எந்தக் காரணத்தைக் கொண்டும் இதுபோன்ற நடவடிக்கையை கொண்டு வரக்கூடாது. தொகுதி மறுவரையறை முயற்சியை கைவிட வேண்டும்” என வைகோ வலியுறுத்தியுள்ளார்.