

முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்த வைகோ.
“எஸ்ஐஆர் என்பது ஜனநாயக மோசடி. 85 லட்சம் பேரை நீக்கிவிட்டு 65 லட்சம் பேரை புதிதாக இணைக்கும் மோசடி வேலை நடக்கிறது” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்கான அழைப்பிதழை வழங்கினார்.
பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: போதைப் பொருட்கள், கஞ்சா குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எச்சரிக்கை செய்யும் விதத்திலும், தமிழகத்தில் சாதி, மத மோதல்களுக்கு இடமில்லை என்பதை வலியுறுத்தியும் சமத்துவ நடைபயணத்தை வரும் ஜன.2-ம் தேதி மேற்கொள்ள உள்ளேன். 950 பேர் இதில் பங்கேற்கின்றனர். பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
நடைபயணத்தை திருச்சி உழவர் சந்தையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடக்க நிகழ்வில் கே.எம். காதர் மொகிதீன், செல்வப்பெருந்தகை, திருமாவளவன், கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். அதன் பின்னர் விராலிமலை, மேலூரில் நடைபெறும் மாநாட்டில் தோழமைக் கட்சியினர் பங்கேற்கவுள்ளனர். ஜன.12-ம் தேதி மதுரையில் நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவிக்கின்றனர். கட்டுப்பாடாகவும், போக்குவரத்து ஒழுங்குடனும் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படும்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும். யார் யாரோடு கூட்டணி அமைத்தாலும், யார் எந்த முயற்சி செய்தாலும் மக்கள் மன்றத்தில் திமுக கூட்டணிக்குத்தான் ஆதரவு உள்ளது. புதிதாக அரசியல் பிரவேசம் செய்தவர்கள், ஏற்கெனவே எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள் திமுக-வை எதிர்கொண்டு வெற்றி பெற முடியாது. திமுக கூட்டணி வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம்.
சட்டசபை தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும்; இப்போது அதற்கான தேவையில்லை. எஸ்ஐஆர் என்பது ஜனநாயக மோசடி, 85 லட்சம் பேரை நீக்கிவிட்டு 65 லட்சம் பேரை புதிதாக இணைக்கும் மோசடி வேலை நடக்கிறது. என்ன முயற்சி செய்தாலும் அவர்களால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.