

திருநெல்வேலி: முதல்வர் விஜய்யிடம் ஒரு தனி வசீகரம் உள்ளது. பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் அவரை ஆதரிக்கிறார்கள் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: எந்த ஆபத்து வந்தாலும் எதிர்கொள்ளும் உறுதி மதிமுகவுக்கு மட்டுமே இருந்தது. திமுக எங்களை மிரட்டுவது போன்று நடத்தி, உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என நிர்பந்தம் செய்தது. இப்போது குதிரை பேரம் பற்றி பேசுகிறது.ஆனால், அதை ஆரம்பித்ததே திமுகதான். எங்கள் கட்சியை சேர்ந்த கம்பம் ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து, திமுகவில் சேர்த்தனர்.
முதல்வர் தலைமையில் நடைபெற்ற தோழமை கட்சிகள் கூட்டம் மிகவும் கண்ணியமாக நடைபெற்றது. தற்போது ஊழல் இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் ஊழல் கொடிகட்டிப் பறந்தது. அந்த ஊழலை தற்போது முதல்வர் இல்லாமல் ஆக்கியுள்ளார். 5 ஆண்டுகளும் விஜய் ஆட்சிதான் நடைபெறும்.
அடுத்த தேர்தலிலும் அவரே வெற்றி பெறுவார். திமுக கூட்டணியில் இருந்தபோது ஏன் இதை பேசவில்லை என்று கேட்கிறார்கள். அப்போது பேசியிருந்தால் மறுநாளே கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்போம். மற்ற கூட்டணிக்கு சென்றிருந்தால் அதையும் விமர்சித்திருப்பார்கள்.
விஜய்யிடம் வசீகரம்: தமிழக வெற்றிக் கழகத்தையும் திராவிட இயக்கத்தின் ஒரு கூறாகவே பார்க்கிறேன். உயிரை கொடுக்கும் தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள். அவர்கள்தான் கட்சியை காப்பாற்றுவார்கள். இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம். முதல்வர் விஜய்யிடம் ஒரு தனி வசீகரம் உள்ளது. பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் அவரை ஆதரிக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.