வைகை அணைக்கான நீர்வரத்து பூஜ்ஜிய நிலையில் நீடிப்பு - குறையும் நீர்மட்டம்

முல்லை பெரியாற்றில் நீர்வரத்து இல்லாததால் வறண்டு கிடக்கும் வீரபாண்டி கருப்பசாமி கோயில் தடுப்பணை பகுதி.

முல்லை பெரியாற்றில் நீர்வரத்து இல்லாததால் வறண்டு கிடக்கும் வீரபாண்டி கருப்பசாமி கோயில் தடுப்பணை பகுதி.

படம்:என்.கணேஷ்ராஜ்.

Updated on: 
1 min read

ஆண்டிபட்டி: பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் குடிநீர் திட்டங்கள், பாசனம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்காக சென்று விடுவதால் வைகை அணைக்கான நீர்வரத்து கடந்த 3 நாட்களாக பூஜ்ஜிய நிலையிலே உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறையத் தொடங்கி உள்ளது.

வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் கடந்த மே 2-ம் தேதி நீர்மட்டம் 20 அடியாக (மொத்த உயரம் 71 அடி) குறைந்தது. ஏற்கெனவே 15 அடிக்கு மேல் வண்டல் மண் படிவு இருப்பதால் அணை வறண்டு குடிநீர் திட்டங்கள் செயலிழந்தன. மேலும், தென்மேற்கு பருவமழையும் பொய்த்ததால் நீர்மட்டம் உயர்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.

இருப்பினும் முல்லை பெரியாறு அணையில் இருந்து சராசரியாக தினமும் 800 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து இருந்து கொண்டே இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வெளியேற்றம் 800 கனஅடியில் இருந்து 400 கனஅடியாக குறைக்கப்பட்டது.

இந்த நீர் மதுரை குடிநீர் திட்டம், முதல்போக பாசனம், லோயர் கேம்ப் குடிநீர் திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்காக முகத்துவாரத்திலே பிரித்து கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் ஆற்றுப் படுகையில் நீர்வரத்து இன்றி வறண்டுவிட்டன.

மூல வைகையிலும் நீர்வரத்து இல்லாததால் வைகை அணைக்கான நீர்வரத்து பூஜ்ஜிய நிலையை அடைந்தது. கடந்த 3 நாட்களாக இந்நிலை தொடர்வதால் 42.5 அடியில் இருந்த நீர்மட்டம் படிப்படியாக குறைந்து நேற்று 41.93 அடியாக சரிந்தது.

இதுவரை பெரியாறு அணை - வைகை அணைக்கு இடையே தொடர்ந்து நீர்வரத்து இருந்து வந்தது. வைகை அணையில் இருந்து மதுரை வரையிலான ஆற்றுப் படுகை மட்டும் வறண்டு கிடந்தது. ஆனால், தற்போது பெரியாறு அணையின் முகத்துவாரமான லோயர் கேம்ப் முதல் மதுரை வரை ஆற்றில் நீரோட்டம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாய் குறையத் தொடங்கி உள்ளது.

<div class="paragraphs"><p>முல்லை பெரியாற்றில் நீர்வரத்து இல்லாததால் வறண்டு கிடக்கும் வீரபாண்டி கருப்பசாமி கோயில் தடுப்பணை பகுதி. </p></div>
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in