

தமிழகத்தில் விவசாயத்துக்கு பிரதானமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 வட்டாரங்களில் வேளாண் உதவி இயக்குநர் பணியிடங்கள் நிரப்பப்படாமல், வேளாண் அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக கவனித்து வருவதால், பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தொய்வு நிலவுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகமும் சேர்த்து 6 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவை தவிர தென்னை, வாழை, வெற்றிலை, சோளம், உளுந்து, எள், நிலக்கடலை சாகுபடியும் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகளுக்கு உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் விநியோகம், பூச்சித் தாக்குதலைத் தடுக்கவும், மகசூலை அதிகரிக்கவும் உரிய ஆலோசனைகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளை வேளாண் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வேளாண் துறையில் பல்வேறுநிலை பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணிகளில் தொய்வு இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர், மதுக்கூர், பாபநாசம், அம்மாபேட்டை, திருவோணம், பேராவூரணி ஆகிய 6 இடங்களில் வேளாண் உதவி இயக்குநர்கள் உள்ள நிலையில் தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம் ஆகிய 8 வட்டாரங்களில் உதவி இயக்குநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
இந்தப் பணியிடங்களை வேளாண் அலுவலர்கள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். உரம் விற்பனையை ஆய்வு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) பணியையும் வேளாண் அலுவலரே கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.
வேளாண் அலுவலர்கள் பணியிடமும் முழுமையாக நிரப்பப்படாததால் ஒவ்வொருவரும் 20 கிராமங்கள் முதல் 30 கிராமங்கள் வரை கவனித்து வருகின்றனர். இதனால், மழை, வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் அவற்றை கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்புவதில் தாமதம் ஏற்படுகிறது. விரைந்து முடிக்க வேண்டும் என்ற உயர் அலுவலர்களின் அழுத்தம் காரணமாக பாதிப்புகள் முழுமையாக கணக்கெடுக்க முடியாத நிலை உள்ளது.
குறிப்பாக போதிய அலுவலர்கள் இல்லாத நிலையில், டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுப்பு தற்போது செயலி மூலம் நடைபெறுவதில் இடையூறுகள் உள்ளதால் கணக்கெடுப்பு முழுமையாக நடைபெறுமா என சந்தேகம் எழுகிறது என்றனர்.
இதுகுறித்து வேளாண் துறை அலுவலர்கள் கூறியது: அரசின் பல்வேறு துறைகளிலும் காலி பணியிடங்கள் உள்ளன. ஆனால், விவசாயமே பிரதானமாக உள்ள தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வேளாண் துறையில் அதிக எண்ணிக்கையில் காலி பணியிடங்கள் இருப்பது சரியல்ல.
வேளாண் அலுவலர் செய்ய வேண்டிய பணியை வேளாண் உதவி அலுவலரும், வேளாண் உதவி இயக்குநர் செய்ய வேண்டிய பணியை வேளாண் அலுவலர்களும் செய்து வருகின்றனர்.
இந்தச்சூழலில் தினமும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, களப் பணிகள் குறித்து உடனுக்குடன் அறிக்கை கேட்பதால் பணிகளில் உள்ள அலுவலர்கள் பணிச்சுமையால் மனஉலைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
செயலி முறை கணக்கெடுப்பில் தாமதம் ஆகும் நிலையில் இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களை புகுத்தும் முன்பு காலியாக உள்ள அனைத்துநிலை பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். அப்போது தான் தொழில் நுட்பங்களை புகுத்துவதன் நோக்கம் நிறைவேறுவதுடன், விவசாயிகளுக்கும் உதவியாக இருக்கும் என்றனர்.