மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
“இந்துக்களின் வழிபாட்டு உரிமையை காலில் போட்டு மிதிக்கிறது திமுக அரசு” - எல்.முருகன்
மதுரை: “இந்துக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு காலில் போட்டு மிதிக்கிறது” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக் கோரி தீக்குளித்து உயிரிழந்த பூர்ணசந்திரன் வீட்டுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று நேரில் சென்று அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தர்மத்தை காக்க வேண்டும் என்றால் உயிருடன் இருந்து அதற்காக போராடி தர்மத்தை வெல்ல வேண்டும். பூர்ணசந்திரன் தர்மத்தை காக்க உயிர்த் தியாகம் செய்துள்ளார். முருக பக்தராக இருந்து உயிரை மாய்த்துள்ளார். அவரின் தியாகம் நிச்சயம் ஒருநாள் வெற்றி பெறும். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் வரை அனைவரும் போராட வேண்டும். அதுதான் பூர்ணசந்திரனுக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும்.
பூர்ணசந்திரனுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது கார்த்திகை தீபம் ஏற்றுவதுதான் ஒரே வழியாக இருக்கும்.பூர்ணசந்திரன் இறப்புக்கு திமுக அரசுதான் காரணம். இதற்கு முதல்வர் ஸ்டாலினும், திமுக அரசும் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் வீட்டுக்கு திமுகவில் இருந்து ஒருவரும் வரவில்லை. அமைச்சர்களும் வந்து பார்க்கவில்லை.
கடவுளுக்காக உயிரை தியாகம் செய்த பூர்ணசந்திரன் திமுக குடும்பத்தை சார்ந்தவராக இருந்தும் அமைச்சரோ, அரசோ மரியாதை அளிக்காததை அவமரியாதையாக பார்க்கிறோம். அவரது தியாகம் நிச்சயமாக வெல்லும். ஒரு நாள் மலையில் தீபம் ஏற்றப்படும்.
வரும் தேர்தலில திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டவார்கள். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை திமுக அரசு ஓட்டுக்காக திசை திருப்பி வருகிறது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது மக்களின் 50 ஆண்டுக்கு மேலான கோரிக்கையாகும். இதை பக்தர்களின் உணர்வாக அரசு பார்க்க வேண்டும். இதை திமுக அரசு கொச்சைப்படுத்தக்கூடாது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் வழிபாட்டு உரிமைகளை வழங்கியிருக்கிறது. தீபம் ஏற்ற வேண்டும் என்பது வழிபாட்டு உரிமை. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது காலம் காலமாக நடந்து வருகிறது. இடைக்காலத்தில் ஓட்டு அரசியலுக்காக அது நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது தான் பக்தர்களின் கோரிக்கை. இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை திமுக அரசு காலில் போட்டு மிதிக்கிறது. இதன்மூலம் அரசியலமைப்ப சட்டத்தை திமுக அரசு மதிக்காமல் செயல்படுகிறது” என்று அவர் கூறினார்.
