

திருச்சி: ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி தர தாமதப்படுத்துவதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை மத்திய ரயில்வே அமைச்சர் கூறியுள்ளதாக, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பிரமதருக்கு தமிழக முதல்வர் அண்மையில் எழுதிய கடிதத்தில், ‘தமிழக ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். ஆனால், ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி தரவில்லை என்று உண்மைக்குப் புறம்பான தகவல்களை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் 148.65 ஹெக்டேர் பரப்பு கொண்ட 7 ரயில் திட்டங்களுக்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி, 2 பெரிய திட்டங்களுக்கு 128.41 ஹெக்டேர் பரப்பில், 73.65 ஹெக்டேர் நிலம் எடுப்புப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இதில், மொரப்பூர்- தருமபுரி புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் 4 கிராமங்களில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை காரணமாக 24.78 ஹெக்டேர் பரப்பளவு நிலங்களுக்கு, ரயில்வே துறை திருத்திய நிலத்திட்ட அட்டவணை சமர்ப்பித்த நிலையில், நிலம் எடுப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்- கன்னியாகுமரி இடையே அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்கத் தேவையான ரூ.298.78 கோடி நிதியை மத்திய ரயில்வே துறை வழங்கவில்லை. தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.739.31 கோடி மட்டுமே நிதி வழங்கியதால், நிலம் எடுப்பதில் சிரமம் உள்ளது.
தமிழகத்தில் 2,500 ஹெக்டேர்: நிலம் எடுக்க தமிழக அரசு நிர்வாக அனுமதி தந்த நிலையில், 931.52 ஹெக்டேர் நிலங்களுக்கு ரயில்வே நிதி ஒதுக்கவில்லை. தமிழகத்தில் 19 ரயில்வே திட்டங்களுக்கு தேவையான 1,273 ஹெக்டேர் பரப்பு நிலங்களில், 1,198 ஹெக்டேர் நிலமெடுப்பு பணிகள் முடிந்து 94 சதவீதம் நிலம் ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இப்படி நிலங்கள் ஒப்படைத்ததை சொல்லாமல், ஏதோ முழுவதுமாக புறக்கணிப்பதுபோல மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என ரயில்வே துறை 2020 ஜூலை 24-ம் தேதி திருவண்ணாமலை ஆட்சியருக்கு கடிதம் எழுதிய நிலையில், அந்த திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என ரயில்வே அமைச்சர் கூறுகிறார்.
தூத்துக்குடி - மதுரை இடையேயான திட்டத்தையும் தமிழக அரசு கைவிடக் கோரியதாக ஆதாரமின்றி ஒரு செய்தியை கூறியுள்ளார். தனுஷ்கோடியில் ரயில் திட்டம் செயல்படுத்தினால் அப்பகுதியில் கடல்வாழ் உயிரினங்களின் சூழலியல் பாதிக்கப்படும் என்பதால் அதைக் கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் கடிதம் எழுதிய நிலையில், அதைக் குறிப்பிடாமல், அந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இப்படி அவர் சொல்லும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பாக உள்ளன. தமிழக முதல்வர், பிரதமருக்கு எழுதிய கடிதத்துக்கு முறையான பதில் இல்லாமல், தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருகிறார். இவ்வாறு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.