‘‘ஜிஎஸ்டி மூலம் வியாபாரிகளின் வாழ்க்கையை மத்திய அரசு வதைக்கிறது’’ - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

Updated on
2 min read

சென்னை: ‘‘ஒன்றிய அரசு வியாபாரிகளின் வாழ்க்கையைச் சிரமப்படுத்தும் வகையில், ஜிஎஸ்டி-யைக் (GST) கொண்டு வந்து வாட்டி வதைக்கிறது. ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசு வணிகர்களின் நலனைப் பேணிக் காக்கின்ற அரசாக செயல்படுகிறது’’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இயங்கி வரும் திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தின் பொன் விழா நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, ‘‘ஒரு சங்கத்தைத் தொடங்குவது எளிது, ஆனால், அதனைத் தொடர்ந்து நடத்துவது சுலபம் இல்லை. இந்தத் திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தை 50 ஆண்டுகளாகக் கட்டுப்பாட்டோடும் ஒற்றுமையோடும் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறீர்கள். அதற்காக இந்த சங்கத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வணிகர்களுக்கும் திராவிட இயக்கத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. திராவிட இயக்கத்தின் தந்தையாக விளங்கும் பெரியார், ஈரோட்டில் ஒரு வணிகர் குடும்பத்தில் பிறந்தவர்தான். அண்ணா திமுகவைத் தொடங்கிய பிறகு, இந்த இயக்கம் வளர்ந்ததே கடைகளில்தான்.

தேநீர்க் கடை, மிதிவண்டிக் கடை, சலூன் கடை எனப் பல்வேறு கடைகளில்தான் திமுக வளர்ச்சி அடைந்தது. அக்காலத்தில் கடைகளில் அரசியல் பேசி வளர்ந்த இயக்கம் என்பதால்தான், திமுக மீது வணிகர்களுக்கும், வணிகர்கள் மீது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் எப்போதுமே தனிப்பாசம் உண்டு. இந்தப் பாசத்திற்கும் பந்தத்திற்கும் இந்த அரங்கமே ஒரு சிறந்த உதாரணம்.

குறிப்பாக, இந்தத் திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்திற்கும் எனக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.இந்தச் சங்கம் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே, அரசாங்கத்திற்கும் வியாபாரிகளுக்கும் இடையே ஒரு பாலமாக இருக்கிறது.

அதோடு சேர்த்து, சட்டமன்ற உறுப்பினர் என்கின்ற முறையில் எனக்கும் தொகுதியில் உள்ள வணிகர்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருக்கிறது. மொத்தத்தில், திருவல்லிக்கேணியில் ஒரு மூன்றடுக்குப் பாலம் போல இந்த வியாபாரிகள் சங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தங்களுக்குப் பயன்படுவதோடு சமூகத்திற்கும் பயன்படுகின்ற தொழில்தான் இந்த வணிகத் தொழில். உள்ளூரில் தொடங்கி உலகம் முழுவதும் உற்பத்தியாகின்ற பொருட்களை எல்லாம் பொதுமக்களுக்குக் கொண்டு வந்து சேர்ப்பவர்கள் வணிகர்களாகிய நீங்கள்தான். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்குவதும் நீங்கள்தான். அப்படிப்பட்ட உங்களுக்கு எல்லா வகையிலும் திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட மாடல் அரசும் என்றைக்கும் துணை நிற்கும்.

ஆனால், இன்றைக்கு ஒன்றிய அரசு என்ன செய்துகொண்டு இருக்கிறது? ஒன்றிய அரசு உங்கள் வாழ்க்கையைச் சிரமப்படுத்தும் வகையில், ஜிஎஸ்டி-யைக் (GST) கொண்டு வந்து வாட்டி வதைக்கிறது.

ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசும், முதல்வரும் வணிகர்களின் நலனைப் பேணிக் காக்கின்ற அரசாக, பேணிக் காக்கின்ற முதல்வராக சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.

முந்தைய பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் வணிகர்கள் எவ்வளவு சிரமப்பட்டீர்கள் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனால், நம்முடைய அரசு அப்படி இல்லை. நம்முடைய முதல்வர் எப்போதுமே வணிகர்களுடைய கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கின்ற முதல்வராக இருந்து வருகிறார். அண்ணன் விக்கிரமராஜா, முதல்வர் என்னென்ன செய்தாரோ அதையெல்லாம் உங்களுக்குச் சுட்டிக் காட்டினார்.

கடந்த மே மாதம் வண்டலூரில் ஏற்பாடு செய்திருந்த வணிகர்கள் மாநாட்டில், மே 5-ஆம் தேதியை வணிகர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தீர்கள். உடனடியாக நம்முடைய முதல்வர் அறிவித்தார்.

கருணாநிதி தொடங்கிய வணிகர் நல வாரியத்தை முந்தைய ஆட்சியாளர்கள் முடக்கி வைத்திருந்தார். அந்த நல வாரியத்தைச் சீரமைத்து, அதன் நிர்வாகத்தில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 20-லிருந்து 30-ஆக உயர்த்தியவர் முதல்வர் ஸ்டாலின்.

அதேபோல, வணிகர் நல வாரியத்தில் சேருவதற்கான உறுப்பினர் ஆயுள் சேர்க்கைக் கட்டணத்தை நீக்கி, பலரும் உறுப்பினராகச் சேர வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தது நம்முடைய அரசு. மிக முக்கியமாக, வணிகர் நல வாரிய உறுப்பினர் குடும்ப நல நிதி உதவித்தொகை முன்பு ஒரு இலட்சம் ரூபாயாக இருந்தது. அதனை முதலில் மூன்று லட்சமாகவும், மீண்டும் ஐந்து லட்சமாகவும் உயர்த்தி, வணிகர்களுடைய குடும்பங்களைப் பாதுகாத்து வருகிறார்.

வணிக உரிமங்களைப் புதுப்பிக்கும் முறைகளை, திராவிட மாடல் அரசு எளிமையாக்கி இருக்கிறது. வரி நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்யச் சிறப்புச் சமாதானத் திட்டத்தை நம்முடைய அரசு அறிவித்தது. அதன்படி சுமார் 1,200 கோடி ரூபாய் அளவுக்கு வரி தள்ளுபடி செய்யப்பட்டு, வணிகர்கள் நலன் பாதுகாக்கப்பட்டது.

மாநகராட்சி மற்றும் நகராட்சி கடைகளின் குத்தகை காலம் 9 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. முக்கியமாக, 24 மணி நேரமும் கடைகளைத் திறந்து வைக்கலாம் என்று உத்தரவிட்டார். இப்படி, வணிகர்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கின்ற வகையில் பல அறிவிப்புகளையும் திட்டங்களையும் திராவிட மாடல் அரசு செய்துள்ளது.

இங்கு வந்துள்ள வணிகர்கள் எதையும் சரியாக எடை போட்டுப் பார்ப்பீர்கள். அதேமாதிரி, நம் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் சரியாக எடை போட்டுப் பாருங்கள். குறிப்பாக, வணிகத்தில் வெற்றிகரமாக இருக்க வேண்டுமானால் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். அதிலும் நிலையான வெற்றி பெற வேண்டுமானால், அந்த நம்பிக்கையைத் தக்க வைக்க வேண்டும். வியாபாரிகளின் நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாற்றக்கூடிய வகையில் திராவிட மாடல் அரசு என்றைக்கும் வணிகர்களின் தோழனாக, பாதுகாவலனாக இருக்கும்” என தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>உதயநிதி ஸ்டாலின் </p></div>
ஆந்திராவில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 2 ரயில் பெட்டிகள் எரிந்து சேதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in