“அதிமுகவை பாஜக மொத்தமாக விழுங்கப் போகிறது” - உதயநிதி ஸ்டாலின்

“அதிமுகவை பாஜக மொத்தமாக விழுங்கப் போகிறது” - உதயநிதி ஸ்டாலின்
Updated on
2 min read

விழுப்புரம்: திமுக கிளை செயலாளர்கள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: 2021-ல் திராவிட மாடல் ஆட்சி அமைவதற்கு தொண்டர்களாகிய உங்களுடைய உழைப்பு தான் காரணம். தமிழகத்தை நமது முதல்வர் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். 11.19 சதவீதம் வளர்ச்சி பெற்று இந்தியாவிலேயே முன்னோடியாக தமிழ்நாடு உள்ளது.

இதையெல்லாம் பொறுக்க முடியாத மத்திய பாஜக அரசு, தமிழ்நாடு அரசுக்கு ஏதாவது ஒரு தொந்தரவு கொடுக்க பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வருகிறார்கள். இதை ஏற்றுக்கொண்டால் மீண்டும் தமிழ்நாட்டுக்குள் ஹிந்தி வந்துவிடும். சமஸ்கிருதத்தை சேர்த்து திணிப்பார்கள்.

இதை தெரிந்துகொண்ட நம்முடைய தலைவர் ஆரம்பத்திலேயே புதிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்று புறக்கணித்தார். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால் ரூ 2,500 கோடியை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தர மறுக்கிறார்.

தொகுதி மறுவரையறையைக் கொண்டு வருகிறார்கள். 39 மக்களவை உறுப்பினர்கள் நாம் வைத்திருக்கிறோம். மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால் இத்தொகுதிகளை குறைப்பதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட் டின் உரிமையை பறிப்பதை தவிர வேறு எந்த வேலையும் பாஜக அரசு செய்யவில்லை.

எஸ்ஐஆர் திருத்தப்பணி மூலமாக சிறுபான் மையினர், ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை பறிப்பது தான் பாஜக அரசின் நோக்கம். இதனால்தான் எஸ்ஐஆர் திட்டத்தை எதிர்த்து திமுக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால் எஸ்ஐஆர் பணியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆதரிக்கிறார். அவருக்கு வேறு வழி கிடையாது.

இல்லையென்றால் அமித்ஷா கோபித்துக் கொள்வார். அமித்ஷாவுக்கு எதிராக மூச்சு கூட விடுவதற்கு பழனிசாமி பயப்படுவார். பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக செயல்படுகிறது. ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு அமித்ஷாவை சந்தித்த செங்கோட் டையன், அவரது கட்டளைக்கு ஏற்ப ஒரு கட்சியில் இணைந்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து அமித் ஷாவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து திரும்பி வந்துள்ளார்.

அவர் என்ன உத்தரவை வாங்கி வந்தார் என்பது அவருக்குத்தான் தெரியும். எஸ்ஐஆர் திட்டத்தை ஆதரித்து தமிழக மக்களுக்கு பழனிசாமி துரோகம் செய்து வருகிறார். அவர் யார் யாருக்கெல்லாம் துரோகம் செய்தார் என்று பட்டியலிட்டால் நீண்டு கொண்டே செல்லும். அவர் துரோகம் செய்யாமல் இருக்கக்கூடிய ஒரே நபர் அமித்ஷா மட்டுமே. அதிமுகவில் இருந்து ஒவ்வொருவரையாக நீக்கி வருகிறார்.

தன்னுடன் கூட்டணி வைக்கிற கட்சிகளை முடித்துவிட்டு, அந்த இடத்தில் தன் இயக்கத்தை கொண்டு வருவதுதான் இன் றைக்கு பா.ஜ.க-வின் முழு நேர வேலை. பாஜ.க வெறும் வாக்கு திருட்டில் மட்டும் ஈடுபடவில்லை. கட்சித் திருட்டிலும் இன்றைக்கு ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறது. அதிமுகவை பாஜக மொத்தமாக விழுங்கப் போகிறது.

‘ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி’ என்று மத்திய பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இதை யெல்லாம் எதிர்த்து மிகப்பெரிய ஒரு ஜனநாயகப் போரை முதல்வர் ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார்.

திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபடுங்கள். மக்களின் பிரச்சினை களை கேட்டு அறிந்து தீர்வு காண முயற்சி செய்யுங்கள். திமுக 200 தொகுதிகளை வென்றெடுக்கும் என முதல்வர் கூறியிருக்கிறார்.

200-க்கும் அதிகமான தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக செஞ்சி ஆய்வு மாளிகை முன்பு துணை முதல்வர் உதயநிதிக்கு செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செஞ்சி அடுத்த பெரும்புகை கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான மாற்றுத்திறனாளி மகேஸ்வரி தனக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட உதயநிதி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

“அதிமுகவை பாஜக மொத்தமாக விழுங்கப் போகிறது” - உதயநிதி ஸ்டாலின்
ரூ.100 கோடி அளவுக்கு போலி மருந்துகள் பறிமுதல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சலைக்கு சீல்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in