தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி - திமுகவினர் திரண்டதால் பரபரப்பு

தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி - திமுகவினர் திரண்டதால் பரபரப்பு
Updated on
1 min read

தஞ்சாவூர்: ‘இரட்டை அர்த்த’ பேச்சு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு போலீஸாரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் அங்கு விசாரணை மேற்கொள்வதாக தெரிகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு வெளியே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.

உதயநிதியை முதலில் தஞ்சாவூர் நகர பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் விசாரிக்க திட்டம் இருந்ததாக தகவல் வெளியானது. இருப்பினும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அப்போது காவல் வாகனத்தில் இருந்து இறங்க மறுத்த உதயநிதி, தன்னை தஞ்சாவூரில் உள்ள காவல் நிலையம் அழைத்து செல்ல கூறியதாக தெரிகிறது.

இருப்பினும் சிறிது நேர ஆலோசனைக்கு பிறகு செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்குள் அவர் சென்றார். அதற்கு முன்பாக காவல் நிலையத்துக்கு வெளியில் இருந்த தொண்டர்களை பார்த்து உதயநிதி கையசைத்தார். அவரிடம் அங்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. விசாரணையை முடித்தவுடன் அவர் விடுவிக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விசாரணை முடிந்து அவர் எப்போது வெளியில் வருவார் என்று திமுக தொண்டர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் திமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வந்துள்ளனர். அங்கு காவல் துறை உயர் அதிகாரிகள், மத்திய மண்டல போலீஸ் ஐஜி உள்ளிட்டோரும் உள்ளனர்.

தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி - திமுகவினர் திரண்டதால் பரபரப்பு
“ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு” - ட்ரம்ப் பகிரங்க அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in