

மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க நடவடிக்கை எடுக்காத தவெக அரசை கண்டித்து தஞ்சையில் நேற்று திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்டோர். படம்: ஆர்.வெங்கடேஷ்
தஞ்சாவூர்: இந்தளவுக்கு மோசமான அரசை தமிழகம் இதுவரை கண்டதில்லை என தஞ்சாவூரில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சித்துள்ளார்.
மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தடுக்க நடவடிக்கை எடுக்காத தவெக அரசை கண்டித்தும், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்து, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும் திமுக சார்பில் தஞ்சாவூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு வரவேற்றார்.இதில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதாவது: காவிரி மேலாண்மை வாரிய உத்தரவின்படி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிய தண்ணீரைப் பெற தமிழக அரசு தவறிவிட்டது. விவசாயிகளின் கண்ணீரைப் பற்றி கவலைப்படாமல், தவெக அமைச்சர்கள் திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விடுகின்றனர்.
காவிரிப் பிரச்சினையை தமிழகமே தீவிரமாக பேசிக் கொண்டிருக்க, முதல்வர் விஜய் ஆய்வு என்கிற பெயரில் ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருக்கிறார். முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ரீல்ஸ் மோகத்தில் உள்ளனர். இதுபோன்ற மோசமான அரசை, தமிழகம் இதுவரை கண்டதில்லை. முதல்வர், நீர்வளத் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்திக்க மறுக்கின்றனர்.
வேளாண்மை துறை அமைச்சர் பட்ஜெட் நகலை எடுத்துக் கொண்டு திருப்பதிக்கு செல்கிறார். இதுதான் இந்த அரசின் லட்சணம். மொத்த அமைச்சரவையும் ஜோக்கர் கூட்டமாக உள்ளது. மேட்டூர் அணை திறக்கப்படாதது பற்றிய கவலைவிஜய்க்கு இல்லை.
குறுவை சாகுபடி பொய்த்ததால் சுமார் 14 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், மமக பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா, மஜக தலைவர் தமீமுன் அன்சாரி, முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.