“டி.ஆர்.பி.ராஜாவுக்கு அடுத்த ஆட்சியிலும் அமைச்சர் பதவி” - உதயநிதி உத்தரவாதம்

“டி.ஆர்.பி.ராஜாவுக்கு அடுத்த ஆட்சியிலும் அமைச்சர் பதவி” - உதயநிதி உத்தரவாதம்
Updated on
1 min read

திருவாரூர்: அடுத்து அமையவுள்ள திமுக ஆட்சியில் டிஆர்பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி உண்டு என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவாதம் அளித்தார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டிஆர்பி ராஜாவை ஆதரித்து, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று காலை மன்னார்குடி பெரியார் சிலை அருகே பேசியதாவது: கஜா புயல், கரோனா காலகட்டத்தில் மக்களோடு, மக்களாக பணியாற்றியவர் டிஆர்பி ராஜா. தொழில் வளர்ச்சியில், இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் உயர்ந்ததற்கு டிஆர்பி ராஜாவின் முயற்சி தான் காரணம்.

தமிழகம் முழுக்க தொழில் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தவர். அவருக்கு போடும் ஓட்டு அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு போடும் வளர்ச்சிக்கான ஓட்டு. எனவே, டிஆர்பி ராஜாவை இந்த முறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

மன்னார்குடி தொகுதியில், திமுகவுக்கு எதிராக, ஒட்டுமொத்த துரோக கூட்டமும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அதிமுக பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால் நான்கு முழம் கயிற்றில் தொங்கி விடுவேன் என்றார் ஒருவர், பழனிசாமியை டயர் நக்கி என விமர்சனம் செய்தவர் மற்றொருவர். தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவை கைப்பற்றுவதற்காகவே கூட்டணி அமைத்துள்ளார். இப்படிப்பட்ட துரோக கூட்டம் எல்லாம் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த தேர்தல் “தமிழ்நாடு அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையிலான தேர்தல்” என்று கூறியுள்ளார். தமிழ்நாடு அணிக்கு கேப்டனாக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். டெல்லி அணிக்கு மோடிதான் தலைவராக உள்ளார். பழனிசாமியை பொறுத்தவரை ஜெயலலிதாவின் காலினை பிடித்தார், அதன் பின்னர் சசிகலா, தினகரன் காலினை பிடித்தார். தற்சமயம் மோடியின் காலினை பிடித்துக் கொண்டிருக்கிறார். இதைத்தான் நான் முரட்டு அடிமை என்று கூறுகிறேன்.

இவ்வாறு கூறியதற்கு எனக்கு அனுபவம் இல்லை என்று பழனிச்சாமி கூறுகிறார் உண்மையில் எனக்கு இதுபோன்று அடிமையாக இருந்த அனுபவம் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். காலில் விழுவது தவறில்லை. ஆனால், சசிகலாவின் காலையே வாரிவிட்டார். இதைத்தான் நான் கூறி வருகிறேன். தற்போது சசிகலாவும் நேரடியாக களத்துக்கு வந்து இது தொடர்பாக கேள்வி கேட்கிறார். நான் சொன்னது சரிதானே என்றும் கூறுகிறார். எனவே இந்த தேர்தலில் சங்கி கூட்டம் வெற்றி பெறக்கூடாது. அவ்வாறு வெற்றிபெற்றால் நமது உரிமைகள் அனைத்தும் பறிபோய்விடும்.

‘நீங்கள் டிஆர்பி ராஜா என்கின்ற தனிப்பட்ட எம்எல்ஏவுக்கு வாக்களிக்கவில்லை, நீங்கள் வாக்களிக்கப்போவது யாருக்கு?’ என உதயநிதி கூறியபோது கீழே இருந்த தொண்டர்கள் ‘அமைச்சருக்கு’ என குரல் எழுப்பினர். அப்போது உதயநிதி ஸ்டாலின் நீங்கள் நினைப்பதைப் போல் வருகின்ற ஆட்சியில் டிஆர்பி ராஜா அமைச்சராக வருவார், அப்போது அவர் மன்னார்குடிக்காக கொடுத்துள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும் என்றார்.

“டி.ஆர்.பி.ராஜாவுக்கு அடுத்த ஆட்சியிலும் அமைச்சர் பதவி” - உதயநிதி உத்தரவாதம்
பின்னணி பாடகர் ஆஷா போஸ்லே காலமானார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in