உதயநிதியை தஞ்சாவூர் அழைத்துச் செல்லும் வழியில் பரபரப்பு!

உதயநிதியை தஞ்சாவூர் அழைத்துச் செல்லும் வழியில் பரபரப்பு!
Updated on
1 min read

விழுப்புரம்: தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை, காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேகேதாட்டு அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு துணை போகும் தவெக அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கவும், பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தி திமுக சார்பில் தஞ்சாவூரில் நேற்று (ஆக. 3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் மற்றும் ஒரு பெண் குறித்து அவதூறாக பேசியதாக குறி தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி கொடுத்த புகாரின் பேரில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்த உதயநிதி ஸ்டாலினை போலீஸார் இன்று (ஆக.4) காலை கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக தஞ்சாவூருக்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியில் மதிய உணவுக்காக, விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல் நிலையத்துக்கு உதயநிதி ஸ்டாலின் பிற்பகலில் கொண்டு செல்லப்பட்டார். சுமார் 30 நிமிடங்கள் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து ஒலக்கூர் காவல் நிலையத்தில் இருந்து தஞ்சாவூருக்கு உதயநிதியை போலீஸார் அழைத்து சென்றனர். செல்லும் வழியில் திரண்டிருந்த திமுகவினரை பார்த்து, போலீஸ் வேனில் இருந்தபடியே உதயநிதி, கையை அசைத்தார். சென்னையில் இருந்து உதயநிதி வந்த வாகனம் மாற்றப்பட்டது. ஒலக்கூரில் இருந்து தஞ்சாவூருக்கு மற்றொரு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். குளிர்சாதன வசதி இல்லாததால் வாகனம் மாற்றப்பட்டதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

ஒலக்கூர் காவல் நிலையத்தில் உதயநிதி தங்க வைக்கப்பட்டிருந்தபோது, உள்ளே செல்வதற்கு முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் முயன்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் திமுகவினர் திரண்டதால், ‘சென்னை - திருச்சி’ தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில், விக்கிரவாண்டி சுங்க சாவடி அருகே வந்த உதயநிதி ஸ்டாலின் பயணித்த போலீஸ் வாகனத்தை திமுகவினர் மறித்தனர். சாலையில் படுத்துக் கொண்டு, உதயநிதி செல்லும் போலீஸ் வாகனத்தை அனுமதிக்க முடியாது என கூறி முழக்கமிட்டனர். அப்போது அங்கு தயாராக இருந்த போலீஸார், திமுகவினரை குண்டு கட்டாக தூக்கி சென்றும், இழுத்து சென்றும் அப்புறப்படுத்தினர்.

உதயநிதியை தஞ்சாவூர் அழைத்துச் செல்லும் வழியில் பரபரப்பு!
அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொ.கு. வழக்கை விரைந்து முடிக்க தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in