“தவறான முன்னுதாரணம்...” - உதயநிதியை விடுவிக்க கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

Updated on
1 min read

சென்னை: ‘தவெக சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நேரடியாக அவர் எந்தவொரு தனிநபரின் பெயரையும் குறிப்பிட்டுப் பேசாதபொழுது, மறைமுகப் பொருள் கொண்டு அவரை கைது செய்வது ஏற்புடையதல்ல. எனவே உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி விவகாரம் குறித்து 03.08.2026 அன்று திமுக சார்பில் தஞ்சையில் நடைபெற்ற கூட்டத்தில் ‘ஆட்சேபகரமான – ஆபாசமான’ முறையில் பேசியதாக, த.வெ.க சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நேரடியாக அவர் எந்தவொரு தனிநபரின் பெயரையும் குறிப்பிட்டுப் பேசாதபொழுது, மறைமுகப் பொருள் கொண்டு உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்வதோ, கைது செய்வதோ ஏற்புடையதல்ல. எதிர்க்கட்சித் தலைவர்கள் மேடைகளில் பேசக்கூடிய பேச்சுகளுக்கெல்லாம் வரிக்கு வரி பொருள் கண்டு உள்நோக்கம் கற்பிக்க ஆரம்பித்தால், தினமும் நூற்றுக்கணக்கான வழக்குகளைப் பதிவு செய்துகொண்டே இருக்க நேரிடும்.

மேலும், தமிழர்களின் வாழ்வாதாரக் காவிரிப் பிரச்சினைக்காகப் போராடும் சமயத்தில், தொண்டர்களின் தேவையற்ற தனிநபர் கோஷங்களை உதயநிதி ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும்; அதேபோன்று ஆபாசமாகப் பொருள்படும் வார்த்தைகளை அவரும் தவிர்த்திருக்க வேண்டும்.

உதயநிதி பேசியதாக ஒளிபரப்பப்படும் பேச்சால் எவரது மனமும் புண்பட்டிருந்தால், அதற்கு அவரை மன்னிப்புக் கேட்க வைக்கவோ அல்லது வருத்தம் தெரிவிக்க வைக்கவோ கோரியிருக்கலாம். அதற்கும் மறுத்தால் மான நஷ்ட வழக்குத் தொடரலாமே தவிர, அதை விட்டுவிட்டு ஒரு வார்த்தைக்காக 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்வது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல; இதுவே தவறான முன்னுதாரணமாகவும் அமைந்துவிடும்.

மேலும், நாளை பட்ஜெட் கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்து சிறையிலடைக்க முயல்வது ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கும் நடவடிக்கையாகவே கருதப்படும். எனவே, உதயநிதி ஸ்டாலின் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனப் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>கிருஷ்ணசாமி </p></div>
“உதயநிதி கைது அரசியல் நாகரிகத்துக்கு பொருந்தாத செயல்” - பிரேமலதா கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in