“எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் செயல்” - உதயநிதி கைதுக்கு தினகரன் கண்டனம்

தினகரன் | கோப்புப் படம்
தினகரன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ‘நாளை தமிழக சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் குரல்வளையையும், ஜனநாயகத்தையும் நசுக்க முயலும் செயலாகவே உதயநிதி ஸ்டாலினின் கைதை பார்க்க வேண்டியுள்ளது’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புமிக்க பதவியில் இருப்பவர் பொது வெளியில் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அதே நேரத்தில் உயர் நீதிமன்ற அறிவுறுத்தலையும் மீறி அவரசம் அவசரமாக காவல் துறையை வைத்து தமிழக அரசு உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ள நடவடிக்கையும் கண்டனத்திற்குரியது.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கண்டித்து தவெகவினர் ஒருபுறமும், தற்போது அவரின் கைதை கண்டித்து திமுகவினர் மறுபுறமும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருவதால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

மேகேதாட்டு அணை மற்றும் காவிரி நீர் பிரச்சினையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், மின்வெட்டு, மின்சார கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கும் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கும் இந்நேரத்தில், தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளை மறந்து ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தனிப்பட்ட தாக்குதல்களையும், தரக்குறைவான விமர்சனங்களையும் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களையும் முன்னேடுத்துக் கொண்டிருப்பது வருந்ததக்கது.

இதனிடையே நாளை தமிழக சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் குரல்வளையையும், ஜனநாயகத்தையும் நசுக்க முயலும் செயலாகவே உதயநிதி ஸ்டாலினின் கைதை பார்க்கவேண்டியுள்ளது. எந்த ஒரு பிரச்சினையாக இருப்பினும் சட்ட ரீதியாக சந்திப்பதை தவிர்த்து, காவல் துறையை ஏவி அதிகார துஷ்பிரயோகத்தை கையாளும் தமிழக அரசின் செயல்பாடுகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளதக்கது அல்ல.

எனவே, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விடுவிப்பதோடு, அவரது கைதால் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலையை கட்டுக்குள் கொண்டுவந்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிட வேண்டும் என காவல் துறையையும், முதல்வர் ஜோசப் விஜய்யையும் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

தினகரன் | கோப்புப் படம்
தவெக கும்பல் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’களாக அவதாரம்: உதயநிதி கைதுக்கு திமுக எதிர்வினை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in