இரு தொகுதி சென்டிமென்ட்.... முதல்வரான விஜய், புதுச்சேரி முதல்வராகும் ரங்கசாமி

இரு தொகுதி சென்டிமென்ட்.... முதல்வரான விஜய், புதுச்சேரி முதல்வராகும் ரங்கசாமி
Updated on
2 min read

புதுச்சேரி: இரு தொகுதி சென்டிமென்ட் கைகொடுத்து வென்று தமிழக முதல்வரானார் விஜய். புதுச்சேரி முதல்வராக வரும் 13-ம் தேதி 5-வது முறையாக ரங்கசாமி பொறுப்பேற்கிறார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும் தவெக தலைவர் விஜய்க்கும் இடையில் நட்பு உள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியைச் சேர்ந்தவர். அவர் முதல்வர் ரங்கசாமிக்கும் விஜய்க்கும் இடையில் பாலமாக இருந்து நட்பை உருவாக்கியுள்ளார். அடிக்கடி பனையூர் சென்று விஜய்யை ரங்கசாமி சந்தித்து பேசுவதுண்டு. போன் மூலமும் பேசி வருவது வழக்கம்.

விஜய் முதல் மாநாடு நடந்தபோது தனது வீட்டையொட்டி கட்டியுள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் ஆசிர்வாதம் செய்து, புஸ்ஸி ஆனந்த் மூலம் எலுமிச்சை பிரசாதத்தை ரங்கசாமி கொடுத்து அனுப்பினார். அந்த மாநாட்டை வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியிலும் பார்த்தார். இரண்டாவது மாநாட்டுக்கும் விஜய்யின் பிறந்த ராசி, நட்சத்திரத்தை வைத்து தேதி, நேரம் குறித்து கொடுத்தார். இவ்வாறாக புஸ்ஸி ஆனந்த் மூலம் விஜய்க்கு முதல்வர் ரங்கசாமி நெருக்கமாக உள்ளார்.

தேர்தல் சமயங்களில் எதிரிகளை சம்ஹாரம் செய்த மூர்த்தியான முருகப் பெருமான திருச்செந்தூர் சென்று ரங்கசாமி வழிபடுவது வழக்கம். அதுபோல் தவெக தலைவர் விஜய்யும் திருச்செந்தூர் சென்று வழிபட்டார். ரங்கசாமி பாணியில் தவெக தலைவர் விஜய்யும் பிரச்சாரம் செய்தார். கட்சி தொடங்கிய முதல் தேர்தலில் ரங்கசாமி ஆட்சியைப் பிடித்தார். அதே போல் விஜய்யும் முதல் தேர்தலில் ஆட்சியை பிடித்துள்ளார்.

தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி ஆலோசனைகளை விஜய் கேட்டு கொண்டு வருகிறார். முக்கியமாக ரங்கசாமியின் இரு தொகுதி சென்டிமென்ட்டை விஜய்யும் பின் தொடர்ந்து அதில் வென்று முதல்வராகியுள்ளார்.

கடந்த 2011-ல் தனிக்கட்சி தொடங்கி, என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கதிர்காமம், இந்திரா நகர் என இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று ரங்கசாமி முதல்வரானார். கடந்த 2016-ம் ஆண்டு தட்டாஞ்சாவடி தொகுதியில் மட்டும் போட்டியிட்டு வென்றார். ஆனால் என்.ஆர் காங்கிரஸுக்கு 8 இடங்கள் மட்டுமே கிடைத்ததால் முதல்வராக முடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவரானார்.

இதையடுத்து 2021-ல் மீண்டும் இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் ஏனாமில் தோற்றாலும் தட்டாஞ்சாவடியில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வரானார். இதனால் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் முதல்வர் ஆவார் என்ற சென்டிமென்ட் உருவானது. இந்த முறை 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தட்டாஞ்சாவடி, மங்கலம் தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

ரங்கசாமிக்கு மிக நெருக்கமான நடிகர் விஜய்யும் தமிழகத்தில் இரு தொகுதிகளில் களம் கண்டார். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு, இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த இரண்டு தொகுதி சென்டிமென்ட் இம்முறை இருவருக்கும் கைகொடுத்து தமிழகத்தில் விஜய் முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளார். புதுச்சேரியில் ரங்கசாமி வரும் 13ம் தேதி 5-வது முறையாக முதல்வராகிறார்.

இரு தொகுதி சென்டிமென்ட்.... முதல்வரான விஜய், புதுச்சேரி முதல்வராகும் ரங்கசாமி
மக்கள் நலன் காக்க விஜய்யின் அரசுக்கு பாமக முழு ஆதரவு அளிக்கும்: அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in