

தென்காசி/சென்னை: தென்காசி அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 6 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 66 பேர் படுகாயம் அடைந்தனர்.
தென்காசி மாவட்டம், திருமலைக்கோவிலில் இருந்து கோவில்பட்டிக்கு நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதுபோல், ராஜபாளையத்தில் இருந்து தென்காசிக்கு மற்றொரு தனியார் பேருந்து எதிரே வந்து கொண்டு இருந்தது. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் துரைச்சாமியாபுரம் கிராமத்தில் சென்றபோது, 2 பேருந்துகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் இரு பேருந்துகளும் பலத்த சேதமடைந்தன. பயணிகள் பலர் பலத்த காயமடைந்து, உயிருக்கு போராடினர். விபத்தில் காய மடைந்தவர்களை உள்ளூர் மக்கள் உதவியுடன் இலத்தூர் போலீஸார் மீட்டனர்.
இந்த கோர விபத்தில் 6 பெண்கள், ஒரு ஆண் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். அவர்களது பெயர் விவரம் வருமாறு: புளியங்குடி, டிஎன் புதுக்குடியைச் சேர்ந்த வனராஜ் (67), இவரது மனைவி சண்முகத்தாய், வடக்கு ஆலங்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி கற்பகவல்லி (45), கடைய நல்லூரைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் மனைவி தேன்மொழி (55), டிஎன் புதுக்குடியைச் சேர்ந்த முத்துராமன் மனைவி மல்லிகா (55), பனவடலிசத்திரத்தைச் சேர்ந்த சுரேஷ் மனைவி முத்துலெட்சுமி (35), சொக்கம்பட்டி முத்துசாமியாபுரத்தைச் சேர்ந்த சண்முகையா மனைவி சுப்புலெட் சுமி (52) ஆகியோராவர்.
படுகாயமடைந்த 60 பேர்: தென்காசி அரசு மருத்துவமனையிலும், 6 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட் டுள்ளனர். இவர்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விபத்துக்குள்ளான கேஎஸ்ஆர் தனியார் பேருந்து உரிமத்தை ரத்து செய்து தென்காசி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்று கூறினார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், எஸ்.பி. எஸ்.அரவிந்த் ஆகியோர் உடனிருந்தனர். விபத்து காரணமாக மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான பேருந்துகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. அதன் பின்னர், அந்த வழியில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
தலைவர்கள் இரங்கல்: பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 6 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த மன வேதனையளிக்கிறது. சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் முறையான விழிப்புணர்வு அறிவிப்புகளில் அரசு சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: விலை மதிப்பில்லாத உயிர்கள் விபத்தில் பறிபோவது மனதை பதற செய்கிறது. இந்த துயரச் சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தனியார் பேருந்துகள் மோதிக் கொண்ட கோர விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, காயமுற்றோருக்கு உயர்தர சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித் துக் கொள்கிறேன்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: அதிக வேகம் விபத்து என்று தெரிந்தும் தனியார் பேருந்துகள் வேகமாக இயக்குவது கண்டிக்கத்தக்கது. தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
தவெக தலைவர் விஜய்: பேருந்துகள் மோதிய விபத்தில், 7 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. படுகாயம் அடைந்தவர்களுக்கு உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும்.