

சென்னை: தவெக மாவட்ட செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் கட்சியின் தலைவர் விஜய்யின் காரை வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தவெகவில் ஏற்கெனவே 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், சில மாவட்ட தொகுதிகளுக்கான மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் நியமனம் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதையொட்டி எஞ்சிய மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கட்சி தலைவர் விஜய் தலைமை வகித்து புதிய மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிப்பாணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வையொட்டி, கட்சி நிர்வாகிகள் காலை முதலே பனையூரில் திரளாக குவிந்தனர். இதற்கிடையே தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக சாமுவேல் என்பவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. அந்தப் பதவி தனக்கு வழங்கப்படும் என எதிர்ப்பார்த்து காத்திருந்த தவெக பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல், பட்டியலில் தன் பெயர் இல்லாததால் அதிருப்தியில் தனது ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்துக்கு வந்து விஜய்யை சந்தித்து பேச முற்பட்டார். ஆனால், பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
அப்போது, ‘தவெகவில் நீண்ட காலம் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை’ என நிர்வாகி அஜிதா கண்ணீர் மல்க தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பனையூர் அலுவலகத்துக்கு வருகை தந்த விஜய்யின் காரை தனது ஆதரவாளர்களுடன் வழிமறித்து அவரிடம் பேச முற்பட்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர், அவருடன் கட்சியின் இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், பேச்சுவார்த்தை நடத்தி, விஜய்யிடம் பேசிக் கொள்ளலாம் என்று கூறி அனுப்பி வைத்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் நிர்மல்குமார் கூறும்போது, “தவெக முன்பு விஜய் மக்கள் இயக்கமாக இருந்தபோது 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருந்தனர். ஒரு மாவட்டத்துக்கே 500 முதல் 1,000 நிர்வாகிகள் இருந்து வந்தனர். தற்போது கட்சியாக மாற்றும்போது ஒரு மாவட்டத்துக்கு 10 முதல் 12 நிர்வாகிகளை மட்டுமே நியமிக்க முடியும். இவ்வாறு கட்சியில் பொறுப்புகள் வழங்கும்போது ஒரு சில இடங்களில் அதிருப்தி வருவது இயல்புதான். இது எல்லா கட்சிகளிலும் இருக்கக் கூடியது.
திமுகவை விட தவெகவில் ஜனநாயகம் அதிகளவில் உள்ளது. அதிகளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். யார் யாருக்கு என்ன பதவி கொடுக்க வேண்டுமோ, கட்சித் தலைவர் முடிவெடுத்து வழங்கி வருகிறார். கட்சிக்காக உழைத்தவர்கள் யாரையும் விஜய் கைவிட மாட்டார். அனைவரையும் அரவணைப்பார்” என்று கூறினார்.