3 தொகுதிகள்... புதுச்சேரியில் வெற்றிக் கணக்கை தொடங்கிய தவெக!

3 தொகுதிகள்... புதுச்சேரியில் வெற்றிக் கணக்கை தொடங்கிய தவெக!
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் தவெக 2 தொகுதிகளிலும், அக்கட்சியின் கூட்டணியான நேயம் மக்கள் கழகம் ஒரு தொகுதியிலும் வென்றுள்ளன. புதுச்சேரியிலும் தவெக தனது கணக்கை துவங்கியுள்ளது.

புதுச்சேரியில் தவெக 28 தொகுதிகளிலும், அக்கட்சி கூட்டணி அமைத்த நேயம் மக்கள் கழகம் இரு தொகுதிகளிலும் போட்டியிட்டன. புதுச்சேரியில் தவெக பல தொகுதிகளில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.

இதில் மணவெளி தொகுதியில் தவெக வேட்பாளர் ராமு 13,822 வாக்குகள் பெற்று வென்றார். அவருக்கு அடுத்தபடியாக உள்ள பாஜக வேட்பாளரும் சட்டப்பேரவைத் தலைவருமான செல்வம் 10,729 வாக்குகளுடன் தோற்றார். இருவருக்கும் உள்ள வாக்கு வித்தியமாசம் 3,093 ஆக உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் அனந்தராமன் 5,932 வாக்குகளுடன் 3-ம் இடம் பிடித்தார்.

பாஜகவில் இருந்த ராமு தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் தவெகவுக்கு சென்று வென்றுள்ளார். புதுச்சேரியில் முதல் தவெக எம்எல்ஏ என்ற நிலையை அடைந்துள்ளார்.

உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடியில் தவெகவுடன் கூட்டணி அமைத்து நேயம் மக்கள் கழகம் போட்டியிட்டது. அதில் தட்டாஞ்சாவடியில் தோற்றாலும் உருளையன்பேட்டையில் நேயம் மக்கள் கழக தலைவர் நேரு 1,201 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அவர் 9,960 வாக்குகள் பெற்றார்.

திமுக கோபால் 8,759 வாக்குகளும், 3-ம் இடத்தில் அதிமுக காந்தி 300 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

சாய் சரவணன் குமார் வெற்றி:

பாஜகவில் அமைச்சராக இருந்த சாய் சரவணன் குமாரை ராஜினாமா செயயச் சொல்லி ஜான்குமாருக்கு அமைச்சர் பொறுப்பு கடந்த அரசில் தரப்பட்டது.

இறுதியில் பாஜகவில் போட்டியிட முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் குமாருக்கு வாய்ப்பு தரவில்லை. இதையடுத்து, கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார்.

இந்தத் தேர்தலில் திருபுவனையில் போட்டியிட்டார். தவெகவில் சாய் சரவணன் குமார் 9,740 வாக்குகள் பெற்று வென்றார். இதையடுத்து தவெக புதுச்சேரியில் 2 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான நேயன் மக்கள் கழகம் ஒரு தொகுதியிலும் வென்றுள்ளது. இதன்மூலம், புதுச்சேரியில் தவெக கூட்டணி 3 தொகுதிகளில் இதுவரை வென்றுள்ளது.

முதல் தேர்தலில் தவெகவும், தவெக கூட்டணிக் கட்சியும் தனது வெற்றிக் கணக்கை புதுச்சேரியில் துவக்கியுள்ளது.

3 தொகுதிகள்... புதுச்சேரியில் வெற்றிக் கணக்கை தொடங்கிய தவெக!
“இது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி” - விஜய் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in