

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்க அனுமதி கோரி தவெகவினர் டிஜிபி அலுவலகத்தில் கடந்த வாரம் மனு அளித்தனர். ஆனால் காவல் துறை ரோடு ஷோவுக்கு அனுமதி தரவில்லை.
இதையடுத்து, டிஜிபி அலுவலகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள், முதல்வர் ரங்கசாமியை அவரது வீடு மற்றும் சட்டப்பேரவை அலுவலகத்தில் ஐந்து முறை வரை பல நாட்களாக தவெக பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் தொடர்ந்து சந்தித்தார். நடுவில் ஒருநாள் அவருடன் ஆதவ் அர்ஜுனாவும் வந்தார். ஆனால், காவல் துறை கரூர் சம்பவம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி அனுமதி தரவில்லை.
இந்நிலையில், எஸ்எஸ்பி கலைவாணனிடம் தவெகவினர் பொதுக் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி கடிதம் அளித்தனர். அதில், வரும் டிசம்பர் 9-ம் தேதி உப்பளம் துறைமுக மைதானத்தில் விஜய் பங்கேற்கும் தவெக பொதுக் கூட்டம் நடத்த அனுமதி தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இதில் காலை 7 முதல் மாலை 6-க்குள் நேரம் ஒதுக்கி தரவும் கோரியுள்ளனர்.