

சென்னை: போக்குவரத்து அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் இன்று (நேற்று) வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், நேற்று (நேற்று முன்தினம்) நள்ளிரவு முதல் கிளாம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் பஸ் வசதியின்றித் தவித்தனர்.
வாக்காளர்கள் சரியான நேரத்தில் தங்கள் இலக்கை அடைந்து வாக்களிப்பதைத் தடுக்கும் நோக்கில் இது போன்ற குறைபாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக, இளம் வாக்காளர்களைத் தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்க விடாமல் தடுப்பதற்கான முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. அரசு அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துத் துறைத் தலைவர்களின் நிர்வாகக் குறைபாடுகளால் மக்களின் ஜனநாயக உரிமை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவை அதிகரிக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இத்தகைய தோல்விகள் அந்த முயற்சிகளைச் சீர்குலைப்பதாக உள்ளன.
எனவே, போக்குவரத்து வசதிகளைச் செய்யத்தவறிய போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் மாநகர, விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் மீது உரியஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.