

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் விருப்ப மனுக்களை வினியோகிக்கும் பணி இன்று (பிப்., 06) தொடங்கியது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விருப்ப மனுக்களை பெற நிர்வாகிகள் குவிந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களம், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில், தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று (பிப். 6) முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
விருப்ப மனுக்களை பிப்.14 ஆம் தேதி வரை தவெக தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் ரூ. 100 செலுத்தி தங்களது விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொண்டனர்.
பனையூரில் நாளை முதல் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம். மனுவில் உள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என்று தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பனையூர் அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விருப்ப மனுக்களைப் பெற நிர்வாகிகள் குவிந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அப்பகுதி மக்களில் சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.