

திருவெறும்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்ற தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜி.
திருச்சி: திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜி வெற்றி பெற்றார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் அன்பில் மகேஸ், அதிமுக சார்பில் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார், தவெக சார்பில் நவல்பட்டு விஜி, நாதக சார்பில் டி.ராஜேஷ் உட்பட மொத்தம் 26 பேர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றதில், முதல் 2 சுற்றுகள் தவெகவின் நவல்பட்டு விஜி முன்னிலையில் இருந்தார். அமைச்சர் மகேஸ் 3, 6-வது சுற்றுகளில் மட்டுமே முன்னிலை வகித்தார். மற்ற அனைத்து சுற்றுகளிலும் நவல்பட்டு விஜி முன்னிலை வகித்தார்.
மொத்தம் 24 சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி, தவெகவின் நவல்பட்டு விஜி 89,837 வாக்குகள் பெற்று தனக்கு அடுத்தபடியாக வந்த அமைச்சர் அன்பில் மகேஸை 8,705 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் 81,132 வாக்குகளும், அதிமுக ப.குமார் 29,473 வாக்குகளும், நாதக டி.ராஜேஷ் 9,311 வாக்குகளும் பெற்றனர்.
2021-ல் அன்பில் மகேஸ் 1,05,424 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ப.குமாரை (55,727) விட 49,697 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அமைச்சர் கே.என். நேருவின் தீவிர விசுவாசியாக இருந்த நவல்பட்டு விஜி, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர், ஒன்றியச் செயலாளர் பொறுப்புகளை வகித்தவர். 10 ஆண்டுகளுக்கு முன்பு திருவெறும்பூர் தொகுதிக்கு அன்பில் மகேஸின் வருகையால் இவருக்கு முக்கியத்துவம் குறையத்தொடங்கியது.
மேலும் அன்பில் மகேஸ் ஆதரவாளர்களால் விஜி ஓரங்கட்டப்பட்டார். இந்நிலையில் தவெகவில் கடந்த சில மாதங்களுக்கு முன் இணைந்து, திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று அன்பில் மகேஸை தோற்கடித்து தனது அரசியல் பகையை தீர்த்துக் கொண்டார்.