

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா
சென்னை: தனக்கெதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க வாக்காளர் கீதாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவின் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் கீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
மனு கோரிக்கையில், இளையராஜாவுக்கு பதில் வேறு ஒருவர் பெயர் இடம் பெற்றிருந்ததால், திருத்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரர் கீதா தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், திருத்த மனுவை தாக்கல் செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, மனுதாரர் கீதாவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதேபோல திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.எல்.ஏ.- எ.வ.வேலு, பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு பின் ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்த எஸ்.ஜெயக்குமார், குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், சேலம் வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கே.சிவக்குமார், சீர்காழி தொகுதி மதிமுக எம்எல்ஏ ஆர்.செந்தில்செல்வன் ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகள், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்குகள் தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டதால், அனைத்து வழக்குகளையும் ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.