

வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய தவெக எம்எல்ஏ விஜய் தாமு.
சென்னை: புதிதாக தேர்வான ராயபுரம் தவெக எம்எல்ஏ விஜய் தாமு, வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. சென்னை ராயபுரத்தில் தவெக வேட்பாளர் விஜய் தாமு வெற்றிபெற்றுள்ளார். அவரது பிறந்தநாள் மற்றும் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ராயபுரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் கொண்டாட்டத்துக்கு கட்சியினர் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்தனர். இதில், தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எம்எல்ஏ விஜய் தாமு நீளமான வீர வாளால் கேக் வெட்டி, பிறந்தநாள் மற்றும் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். கட்சித் தொண்டர்கள் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.இந்நிலையில், அவர் வாளால் கேக் வெட்டும் காட்சிகள், வலைதளங்களில் வைரலாகின. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர், ‘ஏற்கெனவே பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நபர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல, தவெகவின் புதிய எம்எல்ஏ விஜய் தாமு மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.