

ஜெகநாத் மிஸ்ரா, பென்னிகுவிக் பாலசிங்கம்
கூடலூர்: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 133 அடியாக நிலைநிறுத்தி உபரிநீரை தமிழகப் பகுதி கண்மாய், அணைகளில் தேக்க வேண்டும் என்று கம்பம் தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார். 152 அடி அளவுக்கு நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வரும் விவசாயிகளுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கம்பம் தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் முல்லை பெரியாறு அணையில் 133 அடி அளவுக்கு (மொத்த உயரம் 152 அடி) நீரை நிலைநிறுத்த வேண்டும்.
அதற்கு மேல் உள்ள நீரை தமிழகப் பகுதிக்கு வெளியேற்றி வைகை அணை மற்றும் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் தேக்கி வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் 5 மாவட்ட நீராதாரங்கள் உயரும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
152 அடி அளவுக்கு நீர்மட்டத்தை உயர்த்த 5 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு களப்போராட்டங் களையும், சட்டரீதியாகவும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எம்எல்ஏ.வின் இந்த பேச்சு 5 மாவட்ட விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது.
இது குறித்து கேரளாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கேரள காங்கிரஸ் அமைச்சர் மான்ஸ் ஜோசப் செய்தியாளர்களிடம் கூறுகையில், முல்லை பெரியாறு அணை நீர்மட்ட உயர்வு பிரச்சினை பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இது இருமாநிலத்தின் நீண்டகால பிரச்சினை ஆகும். ஆனால் இதுகுறித்த முழுமையான புரிதல் இன்றி ஜெகநாத் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார் என்று குற்றம் சாட்டினார். பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் கூறுகையில், 104 அடிக்கு மேல் உள்ள நீரைத்தான் தமிழகத்துக்கு பயன்படுத்த முடியும்.
அந்த வகையி்ல் 7 டிஎம்சி நீரைத்தான் நாம் பயன்படுத்தி வருகிறோம். எம்எல்ஏ கூறியதைப் போல 133 அடியில் நீரை நிலைநிறுத்தினால் 4.5 டிஎம்சி நீரை இழக்க நேரிடும்.
நீர்மட்டத்தை நிலைநிறுத்துவதில் ரூல்கர்வ் முறை பின்பற்றப்படுகிறது. தமிழகத்துக்கு விநாடிக்கு 2,600 கனஅடி நீர்தான் அதிகபட்சமாக எடுக்க முடியும். எனவே பருவமழையின்போது அணை பாதுகாப்பு கருதி குறைவான நீரையும், மற்ற காலங்களில் கூடுதலாகவும் தேக்கவும் முடியும்.
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணையின் நீர்மட்டம் குறித்த எம்எல்ஏ கருத்து ஏற்புடையதல்ல. மேலும் 152 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்த பலரும் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.
தொடர்ந்து சட்டப் போராட்டங்களை தமிழக அரசும் நடத்தி வருகிறது. இந்நிலையில் நீர்மட்டத்தை குறைப்பது போல வெளிவந்த எம்எல்ஏவின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, என்றார்.