“தவெக அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த பதிலை அளிக்க மறுக்கிறார்கள்” - உதயநிதி விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் 

உதயநிதி ஸ்டாலின் 

Updated on
2 min read

சென்னை: “தவெக அரசில் அந்தந்தத் துறை அமைச்சர்கள் அந்தந்த துறைக்கான பதிலைச் சொல்ல மறுக்கிறார்கள். உதாரணத்துக்கு சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் தடுப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம். இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். அந்த அமைச்சர் இன்றைக்கு அவைக்கு வரவே இல்லை. அதற்கான பதிலையும் அவர் சொல்லவே இல்லை,” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததும், உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோவையில் மாணவர் அமுதன் 10 நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்துகின்ற கும்பலைப் பற்றி காவல்துறையிடம் விவரங்களையெல்லாம் கூறியதற்காக காவல்துறை என்ன செய்திருக்க வேண்டும்? சரியான நடவடிக்கை எடுத்து, போதைப் பொருளைப் பறிமுதல் செய்திருக்க வேண்டும்.

அந்த மாணவன் அமுதன் யார் மீது புகார் கொடுத்தாரோ, யார் போதைப்பொருள் கடத்துகிறார்கள், யார் விநியோகம் செய்கிறார்கள் என்று கூறினாரோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். அதற்கு மாறாக, அந்த போதைப்பொருள் விநியோகம் செய்கின்ற கும்பலை அழைத்து, `இந்த அமுதன்தான் உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கொடுத்திருக்கிறார்’ என்று கூறியதனால், அந்த போதைப் பொருள் விநியோகம் செய்யும் கும்பல் அமுதனை கிட்டத்தட்ட 20 பேரைக் கொண்ட ஒரு கும்பலாகச் சேர்ந்து அடித்து, 5 நாட்களுக்கு முன்பு படுகொலை செய்திருக்கிறார்கள்.

அதுமட்டுமன்றி, திருவொற்றியூரில் இதேபோல தனுஷ் என்ற மாணவர், 20 பேர் கொண்ட ஒரு கும்பலால் தாக்கப்பட்டு பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இப்படித் தொடர்ந்து போதைப்பொருளால் இன்றைக்குப் பல்வேறு சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கின்றன.

இதையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டும் என்று இந்த அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக இன்றைக்கு நாம் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களும் சட்டமன்றத்தில் அரசின் கவனத்தை ஈர்த்துப் பேசியிருக்கிறோம்.

ஆனால், இதற்கெல்லாம் எந்தவிதமான ஒரு சரியான பதிலும் இந்த அரசிடம் இல்லை. மாறாக எங்கள் மீது மீண்டும் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். தங்களது ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று ஒரு தெளிவான விளக்கம் இல்லாமல், எங்கள் மீது மீண்டும் பழியைப் போடுகின்ற வழக்கத்தையே இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமன்றி, நான் பலமுறை இந்த மூன்று மாதங்களாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்பதே சரியாகத் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம் என்றால், இந்த அரசில் அந்தந்தத் துறை அமைச்சர்கள் அந்தந்த துறைக்கான பதிலையே சொல்ல மறுக்கிறார்கள்.

இன்றைக்கு சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம், போதைப் பொருள் தடுப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம். இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். அந்த அமைச்சர் இன்றைக்கு அவைக்கு வரவே இல்லை. அதற்கான பதிலையும் அவர் சொல்லவே இல்லை. இதையெல்லாம் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு வெளிநடப்பு செய்திருக்கிறோம்.” என்றார்.

பின்னர் செய்தியாளர்கள், ‘மீண்டும் அவை நடவடிக்கையில் கலந்து கொள்வீர்களா?’ என கேட்டதுக்கு, “மீண்டும் அவை நடவடிக்கையில் கலந்துகொள்வோம். முறையான பதில் வேண்டும் என்றுதான் கேட்கிறோம். அதற்கான அமைச்சர்தான் வரவில்லையே? அமைச்சர்தானே எழுந்து பதில் சொல்ல வேண்டும்? சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் யார் என்பது மக்களுக்குத் தெரியும்” என்றார்.

பின்னர், ‘நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா எனக் கேட்கிறாரே?’ என்ற கேள்விக்கு, “அந்த காணொலி எப்போது வெளியே வந்தது? ஒரு மாதத்திற்கு முன்னால் வந்தது. அப்படி காணொலி வந்தால், வந்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியென்றால் இந்த அரசுதானே நடவடிக்கை எடுக்க வேண்டும்? அவரை அழைத்து விசாரித்தார்களா? அப்படியென்றால், அந்த அமைச்சர் ஒப்புக்கொள்கிறாரா, அது போதைப் பொருள்தான் என்று ஒப்புக்கொள்கிறாரா?” என்றார்.

பின்னர், மைதானத்தைச் சுற்றிலும் காவல்துறை இருந்தது என்கிறாரே? என்ற செய்தியாளர்கள் சுட்டிக்காட்ட, “அப்படியென்றால், அது போதைப் பொருள்தான் என்று ஒப்புக்கொள்கிறாரா? நான் என்ன சொல்கிறேன் என்றால், இந்த வீடியோ எப்போது வந்தது? ஒரு மாதத்திற்கு முன்பு வந்தது. எனவே இந்த அரசு அவரை அழைத்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எங்களுடைய அரசாக இருந்திருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்போம். ஆனால் இந்த வீடியோ வெளிவந்ததே இப்போதுதான்” என்று உதயநிதி கூறினார்.

<div class="paragraphs"><p>உதயநிதி ஸ்டாலின்&nbsp;</p></div>
கோவை கல்லூரி மாணவர் கொலை: விசாரணை ஆணையம் அமைக்க திருமாவளவன் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in