

சென்னை: திமுக சார்பில் தஞ்சாவூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வருக்கு எதிராக அவதூறான கருத்துகளையும், ஆபாசமான வார்த்தைகளையும் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தவெக தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி, தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்து விசாரணைக்காகத் தஞ்சாவூர் அழைத்துச் சென்றனர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தவெக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதேபோல், முதல்வர் விஜய்யை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியதற்காக உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து தவெகவினரும் மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தினர்.
சென்னையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தவெக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மகளிர் அணியினர் திரளாகப் பங்கேற்று உதயநிதிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், சென்னை நீலாங்கரை, சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் தவெக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதற்கிடையே உதயநிதியின் பேச்சுக்கு தவெக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மற்றும் எக்ஸ்தளப் பக்கத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:
நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த்: எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்னவென்று சொல்லுவது? தன் தாத்தாவும் தந்தையும் வகித்த முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமலா ஒருவர் இருக்க முடியும்?
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: பெண்கள் பற்றி உதயநிதி கொண்டிருக்கும் வக்கிர சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சு கேட்பவர்களைக் காது கூசச் செய்கிறது. இதுபோன்ற இழிவான பேச்சுகளை தமிழகத்தின் எந்தவொரு தாய்மாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு ஏற்புடையதா என திமுகவினர் தங்கள் குடும்பத்தினரிடம் கேட்க வேண்டும். திமுகவினர் இதுபோன்று அவதூறாக பேசுவதை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக அல்ல; ஒரு எம்எல்ஏவாக இருக்கக்கூட தகுதியில்லாதவர். சட்டப்பேரவைக்குள் வருவதற்கும் தகுதியற்றவர்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்: திமுக வரலாறே இதுபோல மக்கள் விரோத ரவுடியிச செயலில் ஈடுபடுவதுதான் என மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்: பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து நாட்டுக்கே பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் இந்த பேச்சு ஏற்க முடியாதது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.