

துரைமுருகன் | கோப்புப்படம்
காட்பாடி: எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்வதில் காட்டிய வேகத்தை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கைதில் காட்ட முடியாது, அப்படிச் செய்தால் ஒரே நாளில் தவெக ஆட்சியை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்து விடும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்தார்.
வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது: கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு தமிழகத்துக்கு வரும்போது குறைகிறது. கர்நாடகா பகுதியில் நீர் திருட்டு நடைபெறலாம். இதை கர்நாடகா அரசு கண்காணிக்க வேண்டும்.
தவெக அரசு 100 நாளை நிறைவு செய்திருக்கிறது. இந்த 100 நாளில் இதைச் சாதித்தோம் என ஏதாவது ஒன்றைச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர எந்த காரியத்திலும் தவெக இறங்கவில்லை. தேர்தல் வாக்குறுதி பக்கமே செல்லவில்லை.
மேகேதாட்டுவில் அணைக் கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. அங்கு அணைக் கட்டி விட்டால் டெல்டா பகுதிகள் மிகவும் வறண்டு போய்விடும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
பாஜக மாநிலத்தவர் நயினார் நாகேந்திரன் முதல்வரின் தாய் குறித்து அவதூறாகப் பேசியதாக வரும் செய்தி குறித்து நான் முழுமையாகப் படிக்கவில்லை. உதயநிதியை கைது செய்வதில் காட்டிய வேகத்தை நயினார் நாகேந்திரன் கைதில் காட்ட முடியாது. அப்படி நயினார் நாகேந்திரன் மீது கை வைத்தால் தவெக ஆட்சியை ஒரே நாளில் மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்து விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.