

திருவண்ணாமலை: "தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைகளுக்கு தவெக அரசு பொறுப்பேற்க முடியாது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் சீனி கார்த்திகேயன் தாயார் நிர்மலா மறைவுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று (அக்.7) நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “மோடி பிரதமராக பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்ததால் அது தவறான ஒன்று என்று கூறி நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறினோம்.
மேகேதாட்டு விவகாரத்திலும் கர்நாடக அரசை தூண்டிவிட்டு பிரதமர் மோடி செயல்படுகிறார். மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிரான வழக்கில் நானே வாதாடி தடை ஆணையை 2015-ம் ஆண்டு பெற்றேன். கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்த திட்டத்தை நான் தடுத்து வைத்துள்ளேன்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு பெரிய அபாயத்தை தொடர்ந்து செய்து வருகிறார். பிரதமர் மோடி இதுவரை தமிழகத்துக்கு தீங்குதான் செய்துள்ளார்.
ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பித்து மக்களை சந்திக்கலாம். தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் நிலைப்பாட்டில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
ஆனால், மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகிய இரண்டும் திராவிட இயக்கத்தின் மூலாதார கொள்கைகளை ஏற்றுக்கொண்டுதான் முதல்வர் விஜய், மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ளார். அந்த கொள்கைகளில் முதல்வர் விஜய் உறுதியாக உள்ளார். பாஜகவுக்கும் இந்துத்துவாவுக்கு தமிழகத்தில் இடமில்லை என்ற வகையில் தான் முதல்வர் விஜய் செயல்படுகிறார்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் எப்போதும் அப்படிதான் கூறி வருவார்கள். எல்லாருடைய ஆட்சி காலத்திலும் தினமும் கொலை, கொள்ளைகள், படுகொலைகள் நடைபெற்று வந்துள்ளது. திடீரென நடைபெறும் படுகொலைகளை காவல் துறையினர் தடுத்துவிட முடியாது. எம்ஜிஆர், கருணாநிதி, ஸ்டாலின் ஆட்சியிலும் இந்த கொடுஞ்செயல்கள் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
தற்போது விஜய் ஆட்சியிலும் இதுபோன்ற செயல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து நடைபெறும் கொலைகளுக்கு இந்த அரசு பொறுப்பேற்க முடியாது. விலைவாசி உயர்வு என்பது இந்தியா முழுவதும் உள்ளது. பணவீக்கத்தின் தொடர் விளைவாக விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது” என்றார்.