

முகமது நசீஃப், நவுஃபல்
கூடலுார்: போதைப்பொருள் கடத்தியதாக திமுக, தவெக நிர்வாகிகளை கேரள போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரி பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 8 கிராம் எம்டிஎம்ஏ போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், காரில் வந்தவர்கள் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நவுஃபல் (45), அதே பகுதியைச் சேர்ந்த தவெக நீலகிரி மாவட்ட மேற்கு மண்டல இணைச் செயலாளர் முகமது நசீஃப் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் போதைப்பொருளை பறிமுதல் செய்து, இருவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து வயநாடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதான இருவரும் இணைந்து தவெக கட்சிக் கொடி கட்டப்பட்ட காரைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் முன்னாள் தவெக நிர்வாகியான பூபாலன் கைது செய்யப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த திமுக, தவெக நிர்வாகிகளுக்கு தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையும் விசாரிக்கும் என போலீஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் விற்பனை செய்த தவெக, திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.