திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி!

திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி!
Updated on
2 min read

வேலூர்: ​திருப்பத்தூர் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் தவெக வேட்​பாளரின் மகன் மாற்று வேட்​பாள​ராக மனு தாக்​கல் செய்​திருந்த நிலை​யில், அவரது மனு ஏற்​கப்​பட்டு சுயேட்சை வேட்​பாள​ராக போட்​டி​யிட சின்​னம் ஒதுக்கியுள்ள​தால் தேர்​தல் களத்​தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்​பத்​தூர் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் அதி​முக சார்பில் போட்​டி​யிட இருந்​தவர் டாக்​டர் திருப்​ப​தி. அவருக்கு, தொகு​தி​யில் போட்​டி​யிட வாய்ப்பு வழங்​கக்​கூடாது என்​ப​தில் உட்​கட்சி பூசல் இருந்​தது. ஆனால், தனக்கு எப்​படி​யும் வாய்ப்பு கிடைக்​கும் என்ற சூழ்​நிலை இருந்​த​தால் தேர்​தல் பணி​களை டாக்​டர் திருப்​பதி கடந்த 2 மாதங்​களுக்கு முன்பே தொடங்கி விட்​டார்.

தொடர்ந்​து, அதி​முக கூட்​ட​ணி​யில் தொகுதி பங்​கீடு பேச்​சு​ வார்த்​தை​யில் திருப்​பத்​தூர் தொகுதி அமமுக​வுக்கு கொடுக்​கப்​பட்​டது. இந்த தகவல் திருப்​பத்​தூர் அதி​முக​வில் கடும் அதிர்​வலை​களை ஏற்​படுத்​தி​யதுடன், டாக்​டர் திருப்​ப​தி​யின் ஆதர​வாளர்​கள் திடீர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். மேலும், ‘அதி​முக​வில் நமக்கு வாய்ப்பு கொடுக்​கா​விட்​டால் தவெக​வில் இணைந்து போட்​டி​யிடலாம்’ என்​றும் முடிவு செய்​தனர்.

இதற்​கிடை​யில், திருப்​பத்​தூர் தொகு​தியை மாற்றி கொடுக்க முடி​யாது என்​ப​தில் அதி​முக தலைமை உறுதியாக இருந்​த​தால் டாக்​டர் திருப்​பதி தனது ஆதரவாளர்​களு​டன் அதி​முக​வில் இருந்து விலகி தவெகவில் இணைந்​ததுடன், திருப்​பத்​தூர் வேட்பாளராகவும் அறிவிக்​கப்​பட்டார். கட்​சி​யில் சேர்ந்த உடனே வேட்​பாளர் வாய்ப்​பை​யும் பெற்​ற​தால் திருப்பத்தூர் தொகுதி தவெக​வில் ஒரு பக்​கம் குமுறல் இருந்​தது. ஆனால், டாக்​டர் திருப்​பதி பலமான வேட்​பாளர் என்பதுடன், பிரச்​சார வேலை​களை துரித​மாக எடுத்​த​தால் பிரச்​சார களத்​தில் அதி​முக​வுக்கு கடும் சவாலை கொடுத்து வரு​கி​றார்.

தந்​தைக்கு மகன் டம்மி

திருப்​பத்​தூர் சட்டப்பேரவை தொகு​தி​யில் தவெக வேட்பாள​ராக டாக்​டர் திருப்​பதி மனு தாக்​கல் செய்​தார். அவருக்​கு, மாற்று வேட்​பாள​ராக (டம்​மி) திருப்​ப​தி​யின் மகன் டி.ஜி.கோ​விந்த் மனு தாக்​கல் செய்​தார். இரு​வரது மனு​க்களிலும் தவெக சார்​பில் போட்​டி​யிடு​வ​தாக குறிப்பிட்​டிருந்​தனர்.

வேட்பு மனுக்​கள் மீதான பரிசீலனை ஏப். 7-ம் தேதி நடை​பெற்​றது. பெரும்​பாலான தொகு​தி​களில் பிர​தான கட்சி வேட்​பாளர்​களின் மனுக்​கள் ஏற்​கப்​பட்​டதும், மாற்று வேட்பாளர்​களின் மனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்​பட்​டன. ஆனால், திருப்​பத்​தூர் தொகுதி தவெக வேட்​பாளர் டாக்​டர் திருப்​ப​தி​யின் மனு​வும், அவரது மகன் டி.ஜி.கோ​விந்த் மனுவும் ஏற்​கப்​பட்​டது.

இதையடுத்​து, ஏப்​.9-ம் தேதி (நேற்று முன்​தினம்) மனுக்​கள் திரும்​பப்​பெற கடைசி நாள் என்​பதுடன், வேட்பாளர்களுக்கு சின்​னங்​கள் ஒதுக்​கும் பணி நடைபெற்றது. அன்​றைய தினம் டம்மி வேட்​பாள​ரான டி.ஜி.கோ​விந்த் மனுவை திருப்​பதி தரப்​பில் திரும்பப்பெறவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்​து, டாக்​டர் திருப்​ப​திக்கு தவெக​வின் அதி​காரப்​பூர்வ சின்​னம் ஒதுக்​கீட்​டுக்​கான கடிதம் கொடுத்​த​தால் அவருக்கு ‘விசில்’ சின்​னம் ஒதுக்​கப்​பட்​டது. தவெக வேட்​பாளர் என குறிப்​பிட்ட நிலை​யில், டி.ஜி.கோ​விந்த் தனது மனுவை திரும்பப் பெறாத​தால் சுயேட்சை வேட்​பாள​ராக கருதி அவருக்கு பகடை சின்​னம் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

4 திருப்​பதி வேட்​பாளர்​கள்

தவெக வேட்​பாளர் திருப்​பதி பெயரை வாக்​காளர்​கள் மத்​தி​யில் குழப்​பத்தை ஏற்​படுத்த 3 சுயேட்சை வேட்​பாளர்​கள் திருப்​பதி பெயரிலேயே போட்​டி​யிடு​கின்​ற​னர். சி.​திருப்​பதி என்​பவ​ருக்கு கைவண்டி சின்​ன​மும், சு.​திருப்​ப​திக்கு சாலை உருளை சின்​ன​மும், ந.திருப்​ப​திக்கு வாளி சின்​ன​மும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

அதோடு, டாக்​டர் திருப்​ப​தி​யின் மகனும் சுயேட்​சை​யாக களத்​தில் இருப்​ப​தால் தேர்​தலில் தேவை​யில்​லாமல் வாக்​கு​கள் சிதறடிக்​கப்பட வாய்ப்​புள்​ள​தாக கூறப்​படுகிறது. இதனால், திருப்​பத்​தூர் சட்டப்பேரவை தொகுதியில் தவெக​வினர் மத்​தியில் சலசலப்பை ஏற்படுத்​தி​யுள்​ளது. வேட்பு மனுவை திரும்பப் பெறாமல் சுயேட்சை வேட்​பாள​ராக களம் இறங்​கியதன் காரணம் குறித்து தெரிந்​து​கொள்ள டி.ஜி.கோ​விந்த், தனது வேட்​பு மனு​வில்​ குறிப்​பிட்​டிருந்​த கைபேசி எண்​ணுக்​கு தொடர்​பு கொண்​டும்​ பேச முடியவில்​லை.

திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி!
கணிக்க முடியாத காரைக்குடி தொகுதியில் கலக்கப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in