கோப்புப் படம்
இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்: ராமேசுவரம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை
ராமேசுவரம்: அரிய வகை கடல் ஆமைகள் ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் இறந்த நிலையில் அடிக்கடி கரை ஒதுங்குவது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 3 கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின.
வங்காள விரிகுடா, பாக் நீரிணை, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் ஆலிவ் ரிட்லி, பச்சை ஆமை, ஹாக்ஸ்பில் ஆமை, லாக்கர்ஹெட் ஆமை, லெதர்பேக் ஆமை ஆகிய 5 வகையான கடல் ஆமைகள் காணப்படுகின்றன. பெண் ஆமைகள் எந்த கடற்கரையில் பிறந்தனவோ, அதே கடற்கரைக்கே சென்று வளர்ந்து கருத்தரித்த பிறகு மீண்டும் முட்டையிடக்கூடிய வழக்கத்தைக் கொண்டுள்ளன.
தமிழகத்தில் அதிக அளவில் ஆமைகள் முட்டையிடுவதற்காக கரைக்கு வரும் பகுதிகளில் ராமேசுவரம் கடற்பகுதி முதன்மையானது. அண்மைக்காலமாக ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்து அடிக்கடி கரை ஒதுங்குவது நிகழ்கின்றன. இந்நிலையில், ராமேசுவரம் அருகே சங்குமால் கடற்பகுதியில் நேற்று ஒரே நாளில் 3 ஆலிவ் ரிட்லி எனும் சிற்றாமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின.
கடல் சுற்றுச்சூழல்: சமன்பாட்டில் கடல் ஆமைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. மேலும், மீன் குஞ்சுகளை உணவாக உட்கொண்டு மீன்வளத்தைஅழிக்கும் ஜெல்லி மீன்களை கடல் ஆமைகள் உணவாக உட்கொள்கின்றன. இதன் மூலம் மீன்வளம் பாதுகாக்கப்படுகிறது.
பருவநிலை மாற்றம், கடல் மாசுபாடு, தடை செய்யப்பட்ட மீன்பிடி முறை, கடலில் பிளாஸ்டிக் பொருட்கள் கலப்பது, படகுகளில் மோதி காயமடைதல் ஆகியவற்றால் ஆமைகள் பாதிக்கப்படுகின்றன.
ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் உள்ள ஆமைகளைப் பாதுகாப்பது குறித்து வனத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
