

சென்னை: “பண ஆசை, பதவி ஆசை காட்டி தவெக அரசு நடத்தும் குதிரை பேரத்துக்கு முடிவு கட்ட வேண்டும்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து, தவெக அரசு மீதான குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து மனு அளித்தார்.
மேலும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் மீது பத்தாவது அட்டவணையின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தகுதி நீக்க மனுவின் மீது தமிழக சட்டப்பேரவைத் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை மற்றும் கடந்த 08.05.2026 அன்று குதிரை பேரம் தொடர்பாக சென்னை கிண்டி காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளத் தவறியமை ஆகியவற்றில், ஆளுநர் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தமிழகத்தில் மே 8-ஆம் தேதி இரவில் இருந்து இன்று வரை குதிரை பேரம் நடக்கிறது. சிலர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக திடீரென மாறுவது, மக்கள் தீர்ப்புக்கு எதிராக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வது என இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தவெக அரசின் குதிரை பேரத்தை முடிவுக்கு கொண்டுவரவே ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன். பணம், பதவிக்காக வாக்களித்த தொகுதி மக்களுக்கு எதிராக ராஜினாமா செய்கின்றனர். தூய சக்தி என்பவர்களின் மூகமுடியை கிழித்து உண்மையை கூறவே ஆளுநரை சந்தித்துள்ளேன். அவர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்” என்றார்.