‘‘போதை பொருட்களின் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’’ - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

Updated on
1 min read

சென்னை: இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் கடுமையான நடவடிக்கைகளின் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியிருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

நடப்பாண்டில் சென்னை மண்டலத்தில் மட்டும் சுமார் 2,300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவும், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 102 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையின் வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க்கும் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழகம் போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாறியிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருக்கும் தகவல் முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலாக அமைந்துள்ளது.

திருத்தணி ரயில்நிலையம் அருகே கஞ்சா போதை தலைக்கு ஏறிய நிலையிலிருந்த சிறுவர்கள் சிலர், வடமாநில இளைஞர் ஒருவர் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதலின் தாக்கம் அடங்குவதற்கு முன்பாகவே, திருப்பூர் அருகே கோயில் திருவிழா ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரை, போதை இளைஞர் ஒருவர் கத்தியைக் காட்டி விரட்டிய சம்பவம், தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் எந்தளவிற்கு வேரூன்றியிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட கொடியவகை போதைப் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்கத் தவறியதன் விளைவே, சக மனிதர்களையே பட்டாக் கத்தியால் தாக்கி, துன்புறுத்தி அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களின் மூலம் பரப்பும் அளவிற்கான கொடூரமான மனநிலையை உருவாக்கியுள்ளது.

எனவே, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடுவதோடு, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>டிடிவி தினகரன் </p></div>
ஆபரேஷன் சிந்தூரின்போது மத்தியஸ்தம் செய்ததாக சீனா அறிவிப்பு - இந்தியா திட்டவட்ட மறுப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in