

திருப்பூர்: தவெக வளர்ந்து வரும் கட்சியாக தெரிகிறது என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் திருப்பூர் தெற்கு தொகுதி ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடந்தது. இதில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியதாவது: அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விவசாயிகள் என அனைத்துதரப்பு மக்களுக்கும் திமுக சொல்லிய வாக்குறுதிகளில் 90 சதவீதம் இன்னும் நிறை வேற்றவில்லை.
திமுகவை எதிர்க்கும் அத்தனை கட்சிகளும் சுயபரிசோதனை செய்து கொண்டு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதால் திமுக கூட்டணி கடும் மிருக பலத்துடன் உள்ளது.
அவர்களை வீழ்த்த எதிர்ப்பவர்கள், சரியாக திட்டமிட வேண்டும். எவ்வித பொறாமையும், அச்சமும் இன்றி தவெக குறித்து சொல்கிறேன்.
வளர்ந்து வருகிற கட்சியாக தெரிகிறது. விஜய் ஆட்சியை கைப்பற்றுவார் என்று சொல்லவில்லை. நல்ல கூட்டணியை விஜய் அமைத்தால், அது தாக்கத்தை உண்டாக்கும்.
என்னுடைய அரசியல் அனுபவத்தில் பேசுகிறேன். ஆனால் அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும். அந்த கூட்டணி ஆட்சி அமைக்கும்.
நாங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்போம். மோடிக்கும், பாஜகவுக்கும். எங்களுக்கும் இடையே எவ்விதக் கசப்பும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.