‘மணல் குவாரிகள் ஏலம் விடப்பட்டதில் நடந்தது என்ன?’ - அரசுக்கு கிருஷ்ணசாமி கேள்வி

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி | கோப்புப் படம்

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி | கோப்புப் படம்

Updated on: 
2 min read

சென்னை: தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் ஏலம் விடப்பட்டது குறித்த உண்மைத் தன்மையை நீர்வளத் துறையும், பொதுப்பணித் துறையும் உடனடியாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நதிகளான தாமிரபரணி, வைகை, அமராவதி, காவிரி, பாலாறு மற்றும் எண்ணற்ற துணை நதிகளின் படுகைப் பகுதிகளில் படிந்து கிடக்கும் மணலை தனியாருக்கு ஏலம் விட்டதும், அதைப் பயன்படுத்தி அவர்கள் ஆறுகளின் நீரோட்டங்களை தடுக்கக்கூடிய அளவிற்கும், நிலத்தடி நீரை வெகுவாகப் பாதிக்கக்கூடிய அளவிற்கும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் பல ஆயிரம் மடங்கு மணலை அள்ளிக் கொள்ளையடித்ததன் விளைவாக எழுந்த தொடர் எதிர்ப்புகளினால், கடந்த ஆட்சியில் ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த ஆட்சியில் கடந்த ஐந்து மாத காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மணல் குவாரிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்), இப்பொழுது மீண்டும் ஒரு சிலருக்குக் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன. டெண்டர் கோருவது குறித்து எந்தவிதமான வெளிப்படையான அறிவிப்புகளையும் அரசு சார்பாக வெளியிடாமல், பூட்டிய நான்கு சுவர்களுக்குள் நான்கு நபர்களை மட்டும் தேர்ந்தெடுத்துவிட்டு, அவர்கள்தான் டெண்டரில் கலந்துகொண்டார்கள் என்று அரசு குறுக்கு வழியில் செயல்படுமேயானால், அது கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். மணல் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரையில், கடந்த இரண்டு மூன்று ஆட்சிக் காலங்களிலும் ஒரு சில நபர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

தமிழக ஆறுகளில் உள்ள மணலைத் தமிழ்நாட்டு மக்களின் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்துவது என்பது வேறு; ஆனால், அதை அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, வெளிநாடான மாலத்தீவு ஆகியவற்றுக்கு கடத்துவது என்பது முற்றிலும் வேறு.

ஊழலற்ற நேர்மையான ஆட்சி நடத்தப் போகிறோம்' என்று தேர்தலுக்கு முன்பு முழங்கிவிட்டு, தற்போது கடந்த காலங்களை விடப் பன்மடங்கு ஊழல் பெருக்கெடுத்து ஓடும் வகையில், தமிழக ஆறுகளில் மணல் கொள்ளையடிக்க நான்கு தனியார்களைத் தேர்ந்தெடுத்திருந்தால், அது கடும் கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே தமிழக மக்கள் ஆற்று மணலுக்கு மாற்றாக எம்-சாண்ட் (M-Sand) பயன்பாட்டிற்குப் பழகிவிட்டார்கள். எனவே, எம்-சாண்ட் விநியோகத்தை முறைப்படுத்தவும் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மீண்டும் தமிழக ஆறுகளைச் சூறையாட எந்தக் கொள்ளைக் கும்பலுக்கும் அனுமதியளித்துவிடக் கூடாது என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், ஆற்று மணல் அள்ள எப்பொழுது வெளிப்படையாக டெண்டர் கோரினீர்கள்? அதற்கான அறிவிப்பு எந்தெந்த நாளிதழ்களில் எப்போது வெளியானது? விண்ணப்பிக்க எவ்வளவு கால அவகாசம் வழங்கப்பட்டது? டெண்டரில் கலந்துகொள்வோருக்கு என்னென்ன தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன? எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் மணல் குவாரி ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்படிருந்தால், மீண்டும் ஒரு மிகப்பெரிய தவறுக்கு இந்த அரசு வித்திடுவது போல் தோன்றுகிறது.

எனவே, தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் ஏலம் விடப்பட்டது குறித்து நீர்வளத் துறையும், பொதுப்பணித் துறையும் இதன் உண்மைத் தன்மையை உடனடியாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி | கோப்புப் படம்</p></div>
கல்பாக்கம் அருகே கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in