மீனாட்சி அம்மன் கோயில் அழைப்பிதழ் வழக்கில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சேர்ப்பு

உயர் நீதிமன்றம் உத்தரவு
மீனாட்சி அம்மன் கோயில் அழைப்பிதழ் வழக்கில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சேர்ப்பு
Updated on
1 min read

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ் தொடர்பான வழக்கில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை எதிர் மனுதாரர்களாகச் சேர்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலெட்சுமி, உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனு: மீனாட்சியம்மன் கோயிலில் செப். 17-ல் குட முழுக்கு நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது. கோயில் விழாக்களில் அறங்காவலர் குழு முக்கியப் பங்காற்றுகிறது.

ஆனால் மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா அழைப்பிதழில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெயர்கள் இடம் பெறவில்லை. இதற்கு முன்பு நடைபெற்ற குடமுழுக்கு மற்றும் கோயில் விழாக்களின் அழைப்பிதழ்களில் அறங்காவலர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த குடமுழுக்கு அழைப்பிதழில் அரசியல் காரணங்களுக்காக அறங்காவலர்களின் பெயர்கள் அச்சிடாமல் விடப்பட்டுள்ளது.

எனவே, கோயில் குடமுழுக்கு விழாவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அதிகார வரம்புக்கு உட்பட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும் அறங்காவலர்களின் சட்டப்பூர்வ கடமைகள், பணிகளில் கோயில் அதிகாரிகள் தலையிடவோ, இடையூறு செய்யவோ, தடுக்கவோ, கட்டுப்பாடு விதிக்கவோ கூடாது என்றும், அறங்காவலர்களின் செயல்பாட்டுக்கு அனைத்து ஒத்துழைப்பு வழங்கவும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் இன்றி அழைப்பிதழை அச்சிட்ட அதிகாரி யார்? அதற்கு அனுமதி அளித்த அதிகாரி யார்? என்பதை தெரிவிக்க கோயில் இணை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர் மனுதாரர்களாக சேர்த்து கருத்து தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.

மீனாட்சி அம்மன் கோயில் அழைப்பிதழ் வழக்கில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சேர்ப்பு
இந்துவாக இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர் எஸ்சி, எஸ்டி சட்டத்தில் நிவாரணம் கோர முடியாது: உயர் நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in