

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இதுவரை 5 அமைச்சர்களை தமிழகத்துக்கு வழங்கிய தொகுதி என்கிற பெருமைக்குரியதாக திருச்சி மேற்குத் தொகுதி உள்ளது.
1971-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் (அப்போது திருச்சி 2) திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற அன்பில் தர்மலிங்கம் தமிழக அமைச்சரவையில் இடம் பிடித்தார்.
1984-ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற என்.நல்லுசாமி, எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் இடம் பெற்றார்.
இதையடுத்து, 2006-ல் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற கே.என்.நேருவும், 2011-ல் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மரியம்பிச்சையும் அமைச்சரவையில் இடம் பெற்றனர். ஆனால், அமைச்சர் பதவியேற்ற ஓரிரு நாட்களிலேயே மரியம் பிச்சை விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றதில் அதிமுக சார்பில் மு.பரஞ்ஜோதி போட்டியிட்டு வென்று அமைச்சரானார்.
இதன்படி, இதுவரை அன்பில் தர்மலிங்கம், என்.நல்லுசாமி, கே.என்.நேரு, மரியம் பிச்சை, மு.பரஞ்சோதி ஆகிய 5 அமைச்சர்களை தந்த விஐபி தொகுதியாக திருச்சி மேற்கு விளங்கி வருகிறது.