

சென்னை: “தமிழக அரசுக்கு இன்று ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் உள்ளது. அரசின் கஜானாவை சுத்தமாக துடைத்து வழித்து வைத்து விட்டு சென்றுள்ளார்கள். தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த நிலையில்தான் இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன். உள்ளே போய் பார்த்துவிட்டு, தற்போதைய தமிழக அரசு இப்போது என்ன நிலையில் உள்ளது என்பதை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிடுவேன்” என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்தார்.
பதவியேற்பு விழாவை தொடர்ந்து 3 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்ட பின்னர் உரையாற்றிய முதல்வர் விஜய், “சினிமாவில் ஒரு சாதாரண உதவி இயக்குநரின் மகன் தான் நான். எனக்கு வாழ்க்கையில் வறுமை, பசி என்றால் என்னவென்று தெரியும். நான் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல. நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன் தான். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான், என்னை வெற்றி பெறவைத்துள்ளீர்கள்.
இந்த பயணத்தில் எனக்கு பல அவமானங்கள் நடந்தது, அதுபோல உங்களுக்கும் நடந்தது. ஆனால் என்கூடவே நின்றீர்கள். நான் ஒன்றும் தேவதூதன் கிடையாது. ஒரு இயல்பான வாழ்க்கை வாழும் மனிதன் தான். சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன். எது சாத்தியமோ அந்த வாக்குறுதிகளையே நான் சொல்வேன்.
இத்தனை கோடி மக்கள் என் கூட இருக்கும்போது என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக அரசுக்கு இன்று ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் உள்ளது. அரசின் கஜானாவை சுத்தமாக துடைத்து வழித்து வைத்து விட்டு சென்றுள்ளார்கள். தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த நிலையில்தான் இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன். உள்ளே போய் பார்த்தால் தான் என்ன இருக்கிறது, என்ன இல்லை எனத் தெரியும். உள்ளே போய் பார்த்துவிட்டு, தற்போதைய தமிழக அரசு இப்போது என்ன நிலையில் உள்ளது என்பதை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிடுவேன்.
நான் யாரையும் மறைமுகமாக, முகத்தை மூடிக்கொண்டு சந்திக்க மாட்டேன். எல்லாவற்றையும் வெளிப்படையாக செய்வேன். அதே நேரத்தில் எனது வாக்குறுதிகளை நிறைவேற்ற நீங்கள் எனக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். பெண்களுக்கான பாதுகாப்பை கண்டிப்பாக உறுதி செய்வேன், போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன், நமது பசங்களை காப்பாற்ற வேண்டியது நம் பொறுப்பு. சட்டம் ஒழுங்கை கண்டிப்பாக உறுதி செய்வேன். என்னை அவமானப்படுத்தியவர்களுக்கும், 8 கோடி மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவேன்.
கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, ரேஷன் போன்ற அடிப்படை பிரச்சினைகளில் முழு முதல் கவனம் செலுத்துவேன். நான் மக்கள் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க மாட்டேன். எனக்கு அந்த அவசியம் இல்லை. அதுபோல நான் யாரையும் தப்பு செய்யவும் விட மாட்டேன். எனது அரசில் யாரும் தவறு செய்ய விடமாட்டேன். ஜெயித்துவிட்டோம் என ஒரு ஆட்டம் ஆடிப்பார்க்கலாம் என்ற என்ணம் இருந்தால், அதனை உடனே மறந்துவிடுங்கள். என் அரசில் ஒரே அதிகார மையம்தான், அது நான் தான். பல அதிகார மையங்கள் இங்கே கிடையாது. பெண்கள், விவசாயிகள் உட்பட அனைத்து மக்களும் நம் அரசின் நன்றாக இருப்போம். சிறுபான்மையினருக்காக நமது அரசு எப்போதும் துணை நிற்கும். இந்து, முஸ்லிம், கிறித்துவர்களுக்கான முகம் தான் இந்த விஜய்யின் முகம்.
முக்கியமாக இந்த விஜய் மாமாவின் குட்டி நண்பா, நண்பிகளுக்கு நன்றி. அவர்களால் தான் இந்த விஷயம் நடந்துள்ளது. அவர்களின் எதிர்காலத்துக்காக திட்டங்களை நிறைவேற்றுவேன். தவெக தோழர்களுக்கு நன்றி. வாருங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவோம்.
மக்கள் நலனை மட்டுமே பிரதானமாக கொண்ட நம் அரசுக்கு ஆதரவு வழங்கிய காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, வேணுகோபால், பிரவீன் சக்கரவர்த்தி, சிபிஎம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, பெ.சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், வன்னியரசு, சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில பொதுச் செயலாளர் வீரபாண்டியன், ஐயுஎம்எல் காதர் மொய்தீன், நவாஸ் கனி அனைவருக்கும் நன்றி. நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும்” என்றார்.