

வைகோ | கோப்புப் படம்
அருப்புக்கோட்டை: சுயமரியாதையையும் தன்மானத்தையும் இழந்துதான் திமுக கூட்டணியில் 9 ஆண்டுகள் பயணித்தோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று நேற்று அவர் பேசியதாவது: தமிழத்தின் தற்போதைய முதல்வர் விஜய் என் வீட்டுக்கு வருவார் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. பண ஆசை என்பது ஒரு சதவீதம்கூட இல்லாதவன் நான். பொதுவாழ்க்கையில் நானும் என் மகன் துரை வைகோவும் லட்சக்கணக்கான கோடிகள் சம்பாதித்து விட்டதாகவும், அண்ணா சாலையில் அடுக்கடுக்கான மாளிகைகளை என் மகன் கட்டி வைத்திருப்பதாகவும் ஒருவர் வீண் பழி சுமத்தி வருகிறார்.
மேலும் முதல்வர் விஜய்யை பார்த்து 50 கோடி ரூபாய் நான் வாங்கிவிட்டதாகவும், 6, 7 மாத காலமாக என் மீது அபாண்டமான பழிகளையும் சுமத்தி வருகிறார். அவரை இப்படிப் பேச வைப்பது யார்? 32 ஆண்டு கால அரசியல் வாழ்வில் ஐந்தரை ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளேன், என்னால் யூகிக்க முடியாதா? யார் இதைத் தூண்டி விட்டது என்று.
முல்லை பெரியாறு அணை இல்லையேல் மதுரை மாநகருக்கு குடிக்கத் தண்ணீர் கிடைக்காது. 85 லட்சம் ஏக்கர் பஞ்சப் பிரதேசமாகும். அப்படிப்பட்ட முல்லை பெரியாறை காக்க 11 ஆண்டுகள் போராடியவன். நான் இருக்கும் இடத்துக்கு விசுவாசமாக இருந்திருக்கிறேன். அவர்களை தூக்கிப் பிடித்திருக்கிறேன்.
ஆனால், எங்களைவிட வலுகுறைந்த கட்சிகளுக்கு அதிக இடங்கள், கிளைகள்கூட இல்லாத கட்சிக்கு 8 இடங்கள், காணாமல்போகும் நிலையில் இருந்த கட்சிக்கு 10 இடங்களும் மாநிலங்களவை பதவியும் அளித்தார்கள். எங்களுக்கு மாநிலங்களவை இடமும் கிடைக்கவில்லை.
வேறு வழியில்லாமல்... அனைத்துக் கட்சிகளும் அவரவர் சின்னத்தில் நின்றபோது எங்களை மட்டும் அவர்களின் சின்னத்தில் நிற்க சொன்னார்கள். வேறு வழியில்லாமல் அவர்களின் சின்னத்தில் நின்றோம். எங்கள் சுயமரியாதையையும் தன்மானத்தையும் இழந்துதான் 9 ஆண்டுகள் பயணித்தோம். இந்த 9 ஆண்டுகளில் திமுகவை ஒரு சொல் தவறாக சொன்னது உண்டா? உங்களோடு இருந்த கட்சிகள் உங்களை விமர்சித்தன, அது உங்களுக்குத் தவறாகப்படவில்லை.
பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுகவை அமைச்சரவையில் அமர்த்த முடிவு செய்த நீங்கள், எங்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும். இப்படிப்பட்ட விபரீத முடிவுக்கு வருவீர்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.