வெற்றிப் பயணம் திட்ட குழப்பத்தில் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள்!

வெற்றிப் பயணம் திட்ட குழப்பத்தில் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள்!
Updated on: 
1 min read

நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது, தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில், ‘புறநகர் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்’ என வாக்குறுதி அளித்திருந்தது.

அந்த வாக்குறுதியை செயல்படுத்தும் வகையில் நாளை அக். 2 காந்தி ஜெயந்தியன்று, வெற்றிப் பயணத் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

மாநகர மற்றும் நகர சாதாரண அரசுப் பேருந்துகளில் நடைமுறையில் உள்ள மகளிருக்கான இலவசப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ் (LSS), டீலக்ஸ் மற்றும் புறநகர் சாதாரண அரசுப் பேருந்துகள் உள்ளிட்டவற்றில், 80 கி.மீ வரை பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் அந்தந்தப் பகுதிகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் அளிப்பது குறித்து ஆலோசித்து, எந்தெந்த தடங்களில் உள்ள பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்தை அனுமதிப்பது என உத்தேச பட்டியல் தயாரித்து வருகிறது.

உதாரணமாக, கள்ளக்குறிச்சி - திட்டக்குடி சாலை மார்க்கத்தில் இயக்கப்படும் தடம் எண் 341 சாதாரண பேருந்து, சின்ன சேலம் - திட்டக்குடி தடம் எண் 257 சாதாரண பேருந்து போன்ற தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என உத்தேசப் பட்டியல் தயாரித்து, நடத்துநர்களிடம் அளித்துள்ளனர்.

அதேபோன்று கடலூர் - விருத்தாசலம் வழித்தடத்தில் இயக்கப்படும் தடம் எண் 219 சாதாரண பேருந்தில் பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக கோட்டத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் இதுபோன்ற உத்தேச பட்டியல் வழங்கப்படாததால் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மட்டுமின்றி அந்தந்த போக்குவரத்து பணிமனை மேலாளர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

இது ஒருபுறமிறக்க, அரசு சார்பில் அறிவித்துள்ள டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் பயணிப்பதற்கான விவரங்களும் சரிவர அறிவிக்கப்படவில்லை. இதனால் பணிமனை மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சிலரிடம் இதுபற்றி பேசியபோது, “இலவச பயணம் என்று அறிவித்து விட்டார்களே தவிர, அதை எப்படி செயல்படுத்துவது என அதிகாரிகளிடையே குழப்பம் நிலவுவது உண்மைதான்.

இதை நடைமுறைப்படுத்தும் போது, பொதுமக்களிடமிருந்து என்ன விதமான எதிர்மறைகளை சந்திக்கப் போகிறோம் என்பது தெரியவில்லை. நாளை திட்டம் தொடங்கப்போவதாக அறிவித்து விட்டார்களே தவிர, இதுவரை இலவச பயணப் பேருந்துக்கான உத்தேச பட்டியல் எங்களுக்கு வரவில்லை” என்று தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவத்துக் கழக பொதுமேலாளர் குணசேகரனிடம் கேட்டபோது, “வழித்தடங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அரசிடம் இருந்து தெளிவான வழிகாட்டுதல் வரவில்லை. வந்தால்தான் முடிவாக இதுபற்றி கூற முடியும்” என்று தெரிவித்தார்.

வெற்றிப் பயணம் திட்ட குழப்பத்தில் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள்!
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in