

திருச்சி: திருச்சியில் திரும்பிய திசையெல்லாம் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருச்சி மாநகரின் பிரதான பகுதியான மலைக்கோட்டை ரயில் நிலைய மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
ரயில் நிலைய சந்திப்பில் இருந்து மன்னார்புரம்- கிராப்பட்டி செல்லும் ரயில்வே பாலப் பணிகள், தேவதானம் ரயில்வே மேம்பாலப் பணிகள், திருவானைக்காவல் புறவழிச்சாலை காவிரி பாலம் பராமரிப்புப் பணிகள், சிந்தாமணி செல்லும் பாலப் பணிகள், திருந்தாந்தோணி சாலையில் கரை பராமரிப்புப் பணிகள் என மாநகரம் மற்றும் மாநகரத்தை அணுகும் பகுதிகள் முழுவதும் ஏதாவது ஒரு பணி நடைபெற்று வருகிறது.
இதனால், திருச்சி மாநகரில் வழக்கமாகவே ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று வழக்கத்தைவிட அதிகமாக கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
மாநகரில் திரும்பிய திசையெல்லாம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. திருவானைக்காவல்- சத்திரம் பேருந்து நிலையம் காவிரி பாலம், கொள்ளிடம் நேப்பியர் பாலம், ஓடத்துறை மேம்பாலம், கரூர் புறவழிச்சாலை மேம்பாலம், அரியமங்கலம் உள்ளிட்ட பாலங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. இதன் காரணமாக வேலைக்கு செல்லக் கூடிய பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியது: திருச்சி மாநகர் முழுவதும் ஏதாவது பாலப் பணிகள், சாலைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இவை எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாத நிலை உள்ளது. இந்நிலையில், தவெக அரசை கண்டித்து திருச்சி மரக்கடையில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அதிமுக நிர்வாகிகள் தங்களது பலத்தை காட்டுவதற்காக மாவட்டம் முழுவதும் இருந்தும் கட்சியினர் ஏராளமானோரை மாநகருக்குள் வாகனங்களில் அழைத்து வந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் தொடங்கியது.
இதுதவிர, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திருச்சி வந்து, முத்தரையர் மணிமண்டபம், ரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை என்று சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், ஆங்காங்கே போக்கு
வரத்து நிறுத்தப்பட்டு, அதனால் வாகன நெரிசல் அதிகரித்தது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள்கூட ஊர்ந்து செல்ல வேண்டியதாகிவிட்டது. காலையில் தொடங்கிய மாநகர போக்குவரத்து நெருக்கடி மற்றும் பொதுமக்களின் அவதி மாலை வரை தொடர்ந்து நீடித்தது.
எனவே, பரவலாக நடைபெறும் பாலப் பணிகள் நிறைவுறும் வரையிலாவது, மாநகருக்குள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம், போராட்டத்துக்கு மாநகர காவல் துறையினர் அனுமதி வழங்கக்கூடாது என தெரிவித்தனர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்
அதிமுக ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறையிடம் அனுமதி கேட்டு வழங்கிய கடிதத்துக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், ஆர்ப்பாட்டத்துக்கு கூடிய 1,000-க்கும் மேற்பட்டோர் மரக்கடை எம்ஜிஆர் சாலையின் நேராக உள்ள மேலரண் சாலையில் மட்டுமின்றி, காந்தி மார்க்கெட் சாலையையும் சேர்த்து அடைத்து நின்றுகொண்டனர். இதனால், காலை 10 மணி முதலே அந்தச் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அவர்களை வலுக்கட்டாயமாக சாலையில் இருந்து அப்புறப்படுத்தினால் அரசியல் ரீதியான விமர்சனங்கள் எழும் என்பதாலும், முன்னாள் குடியரசுத் தலைவருக்கான பாதுகாப்பு பணியில் அதிகளவு போலீஸார் பயன்படுத்தப்பட்டதாலும் மாநகர போலீஸார் அமைதிகாத்தனர். இதன் காரணமாகவே, மாநகர மக்கள் முழு நாளும் அவதியுற வேண்டியதாகிவிட்டது.