

சென்னை: முதல்வராக பதவியேற்ற ஜோசப் விஜய்க்கு, பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது:
கிரெடாய் தமிழ்நாடு தலைவர் டபிள்யூ.எஸ் ஹபீப்: தெளிவான வளர்ச்சி, வலுவான உள்கட்டமைப்பு, தூய்மையான நிர்வாகம், ஊழலற்ற சூழல் மற்றும் அமைப்புகளில் கூடுதல் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை இளைஞர்களும், நகர்ப்புற வாக்காளர்களும் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இந்த மக்கள் தீர்ப்பு என்பது வெறும் அரசியல் முடிவு மட்டுமல்ல.
இது முன்னேற்றம், வாய்ப்பு மற்றும் பொறுப்புக்கூறலை விரும்பும் ஒரு புதிய தலைமுறையின் குரலாகும். எதிர்காலத்துக்கு தயாராக உள்ள ஒரு புதிய தமிழகத்தை நோக்கிய தேடல் இது. தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன்: முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் ஜோசப் விஜய் தலைமையிலான தவெகவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுவரை, ஆட்சிக் கட்டிலில் யார் அமர்ந்தாலும், அரசியல் வேறுபாடு பார்க்காமல் ஆட்சியாளர்களின் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கும் தலைமைச் செயலகப் பணியாளர்கள், அடுத்த 5 ஆண்டுகளில் அரசின் திட்டங்களை செயல்படுத்த அனைத்து ஒத்துழைப்பையும் நல்குவர்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் செ.நா. ஜனார்த்தனன்: தமிழக அரசின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதால், மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பை மெல்ல இழந்து வருகின்றனர்.
எனவே, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒரு தொழிற்கல்வி பாடத்தையாவது கட்டாய பாடமாக தமிழக அரசு அறிவிக்க இந்நேரத்தில் கேட்டுக்கொள்கிறோம்.
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்: தமிழகத்தில் பதவியேற்றுள்ள விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு வாழ்த்து. அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதையும், மருத்துவத்துறையில் தற்காலிக, ஒப்பந்த முறைகளில் பணிபுரியும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் படிப்படியாக பணி நிரந்தரம் வழங்க நடவடிக்கை எடுப்பதையும், ஒப்பந்த முறை பணி நியமனங்களை கைவிடுவதையும் புதிய அரசு பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்டும்.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி: மறைந்த முதல்வர் எம்ஜிஆருக்கு பிறகு, எண்ணற்ற நடிகர்கள் அரசியலில் களம் கண்டிருந்தும் கடைசியில் திராவிட கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களாக மட்டுமே மாறிப் போன வரலாற்றை மாற்றி, முதல்வராக பதவியேற்ற ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.