

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (செப்.16) நிறைவு பெறுகிறது. இந்த சூழலில், கருத்துக் கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (செப்டம்பர் 16) கடைசி நாளாகும்.
இந்நிலையில் மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), ஜானகிராமன் (நாம் தமிழர்) மற்றும் 3 சுயேச்சைகள் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். இதுவரை மதுராந்தகம் தொகுதியில் 13 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது. அதேபோல், தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யா, கோட்டாட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பெலிக்ஸ் ராஜாவிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது ஈரோடு எம்.பி. பிரகாஷ், முன்னாள் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தாராபுரத்தில் இதுவரை 17 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (செப்டம்பர் 17) நடைபெறவுள்ளது. தொடர்ந்து வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் செப்டம்பர் 19-ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்நிலையில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகள் முடிவுகளை வெளியிடவும், பரப்பவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதன்படி வாக்குப்பதிவு நாளான அக்டோபர் 6-ம் தேதி காலை 7 முதல் மாலை 6.30 மணி வரை அச்சு அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவதும், அதன் முடிவுகளை வெளியிடுவதும் அல்லது விளம்பரப்படுத்துவதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்துக்கு முந்தைய, 48 மணி நேரங்களில், கருத்துக்கணிப்பு முடிவுகள் அல்லது தேர்தல் தொடர்பான எந்தவொரு செய்தியையும் மின்னணு ஊடகங்களில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறிச் செயல்படுவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.